தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சீன்’. மலையாளத்தில் ‘ஆவேஷம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜீத்து மாதவன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக நஸ்லென் நடித்துள்ளார். மேலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகை நஸ்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘சீன்’ திரைப்படத்தின் வெளிநாட்டு முன்பதிவு தற்போது குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே தொடங்கியுள்ளது. இருப்பினும், முன்பதிவு தொடங்கிய குறுகிய காலத்திலேயே இப்படம் சுமார் ரூ.1 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாடுகளில் இன்னும் குறைந்த அளவிலான திரையரங்குகளில் மட்டுமே முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில், இந்த வசூல் படக்குழுவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் கொடுக்கும் திரைப்படமாக ‘சீன்’ அமையும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன. இதற்கிடையில், இப்படத்திற்கான இந்திய முன்பதிவு இன்று தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டிரைலருக்கு கிடைத்த வரவேற்பு மற்றும் வெளிநாட்டு முன்பதிவில் கிடைத்துள்ள வரவேற்பு ஆகியவற்றால் ‘சீன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படம் வெளியான பிறகு பாக்ஸ் ஆபிஸில் எத்தகைய சாதனையைப் படைக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.