மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மம்மூட்டி, தற்போது நிஜ வாழ்க்கையிலும் ஒரு முக்கிய பொறுப்பை ஏற்றுள்ளார். கேரளாவில் அதிகரித்து வரும் இணையவழி குற்றங்களைத் தடுக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள புதிய திட்டத்தில் அவர் முக்கியப் பங்காற்ற உள்ளார். கேரளாவில் இணையவழி மோசடிகள் மற்றும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் பங்களிப்புடன் ‘கிளிக்’ (CLICK) என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
‘கிளிக் – சைபர் குற்றங்களை எதிர்க்கும் கேரளாவிற்கான சமூகத்தால் வழிநடத்தப்படும் முயற்சி’ என்ற இந்தத் திட்டத்தை மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் விளம்பரத் தூதராகவும், ‘சைபர் செக்யூரிட்டி கேப்டனாகவும்’ நடிகர் மம்மூட்டி நியமிக்கப்பட்டுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இணையவழி குற்றங்கள் நடைபெற்ற பிறகு அவற்றை விசாரிப்பதை விட, குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே தடுப்பதே மிகவும் முக்கியம் என்று தெரிவித்தார்.

மேலும், கடந்த ஆண்டு கேரளாவில் இணையவழி மோசடிகள் தொடர்பாக 54 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புகார்கள் பதிவாகியுள்ளதாகவும், 2027-ம் ஆண்டுக்குள் இணையத் தாக்குதல்களைத் தடுக்கும் திறன் கொண்ட மாநிலமாக கேரளாவை உருவாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம் என்றும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய மம்மூட்டி, இணையக் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வில் இளைஞர்கள் முன்னின்று செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும், குழந்தைகளுக்கு தொழில்நுட்பத்தைப் பொறுப்புடன் பயன்படுத்த பெற்றோர்கள் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “குழந்தைகள் அழும்போதோ அல்லது தவறாக நடந்துகொள்ளும்போதோ அவர்களை அமைதிப்படுத்த ஸ்மார்ட்போன்களைக் கொடுப்பது நல்ல யோசனை அல்ல. மொபைல் போன்களைப் பொறுப்புடன் பயன்படுத்தும் அளவுக்கு குழந்தைகள் முதிர்ச்சியடையும் வரை, அவர்களுக்கு பட்டன் போன்களை வழங்குவதே சிறந்தது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், இணையக் குற்றங்களைக் கண்டறிந்து அவற்றை எதிர்கொள்ளும் திறனை ஒட்டுமொத்த சமூகமும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 மாணவர்களுக்கு ‘கிளிக் கேப்டன்’ தொப்பிகளை மம்மூட்டி வழங்கினார். திரையில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்து வரும் மம்மூட்டி, தற்போது சமூகத்தின் பாதுகாப்பிற்காக சைபர் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வுப் பணியில் இணைந்திருப்பது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.