100-வது நாள் கொண்டாட்டத்தில் ‘ஜனநாயகன்’!

நடிகர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாகி 100 நாட்களை நிறைவு செய்ததை முன்னிட்டு, சென்னையில் நடைபெற்ற சிறப்புக் காட்சியில் ரசிகர்கள் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர். குறிப்பாக, படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் விஜய்யின் முதலமைச்சர் டைட்டில் கார்டு காட்சியை 8 முறை மீண்டும் ஒளிபரப்பக் கோரிய சம்பவம் தற்போது கவனம் பெற்றுள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜனநாயகன்’. இப்படம் கடந்த ஜூலை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விஜய்யின் கடைசித் திரைப்படம் என்பதால் இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், படம் வெளியாகி 100 நாட்களை நிறைவு செய்ததையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள பிரபல கமலா திரையரங்கில் ரசிகர்களுக்காகச் சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டன.

Jana Nayagan celebrates 100th day
Jana Nayagan celebrates 100th day

படத்தின் தொடக்கத்தில் ‘தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்’ என்ற டைட்டில் கார்டு திரையில் தோன்றியபோது ரசிகர்கள் உற்சாகத்தில் ஆரவாரம் செய்தனர். இதனால் அந்தக் காட்சியை மீண்டும் மீண்டும் ஒளிபரப்ப வேண்டும் என்று திரையரங்கு நிர்வாகத்திடம் ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர். ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று அந்த டைட்டில் கார்டு காட்சி மட்டும் 8 முறை மீண்டும் திரையிடப்பட்டது. இதனால் திரையரங்கமே ரசிகர்களின் கொண்டாட்டத்தால் அதிர்ந்தது.

இதுகுறித்து கமலா திரையரங்கின் உரிமையாளர் விஷ்ணு கமல் கூறுகையில், முதலில் ஒரே ஒரு சிறப்புக் காட்சியை மட்டுமே திரையிடத் திட்டமிட்டதாகவும், ஆன்லைன் முன்பதிவு தொடங்கிய சில நொடிகளிலேயே அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்ததாகவும் தெரிவித்துள்ளார்.  ரசிகர்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்ததால் அடுத்தடுத்து காட்சிகள் திறக்கப்பட்டதாகவும், மொத்தம் நான்கு காட்சிகளுக்கான டிக்கெட்டுகளும் உடனடியாக விற்றுத் தீர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், படம் இணையத்தில் கசிந்துவிட்டதால் திரையரங்குகளில் கூட்டம் இருக்காது என்று சிலர் கூறிய நிலையில், 100-வது நாள் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் காட்டிய உற்சாகம் அதற்குப் பதிலடி கொடுத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். விஜய் ரசிகர்கள் படத்தை இவ்வளவு உற்சாகமாகக் கொண்டாடுவதற்குக் காரணம் ‘விஜய்’ என்ற மூன்றெழுத்து மந்திரம்தான் என்றும் விஷ்ணு கமல் பெருமிதத்துடன் கூறியுள்ளார். விஜய்யின் கடைசித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ 100 நாட்களைக் கடந்தும் ரசிகர்களின் ஆதரவுடன் கொண்டாடப்பட்டு வருவது விஜய் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment