தாயரா – திரைப்பட விமர்சனம் | பிரித்விராஜ் சுகுமாரன், கரீனா கபூர் கான்

தாயரா – திரைப்பட விமர்சனம் (Daayara Movie Tamil Review)

படக்குழு:

நடிகர்கள்: பிரித்விராஜ் சுகுமாரன், கரீனா கபூர் கான், ஷைட்டி ஜாக் மற்றும் பலர்
கதை: மேக்னா குல்சார், சேமா யஷ்

இசை: அமித் திரிவேதி

ஒளிப்பதிவு: சௌரப் கோஸ்வாமி

எடிட்டிங்: மேக்னா குல்சார், சாரு ஸ்ரீ ராய்

தயாரிப்பு: Junglee Pictures, Pen Studios

இயக்கம்: மேக்னா குல்சார்.

கதைச் சுருக்கம்:

ஒரு குறிப்பிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நான்கு குற்றவாளிகள் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்படுகின்றனர். இந்தச் சம்பவத்தை ஒட்டுமொத்த மக்களும் கொண்டாடும் நிலையில், என்கவுண்டரை நடத்திய டிசிபி பிரித்விராஜ் சுகுமாரன், அது திட்டமிட்ட என்கவுண்டர் கிடையாது என்றும், தற்காப்புக்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என்றும் கூறுகிறார். ஆனால், மனித உரிமைகள் ஆணையம் இந்த விளக்கத்தை ஏற்க மறுக்கிறது. இது திட்டமிட்ட என்கவுண்டராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கரீனா கபூர் கான் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) அமைக்கப்படுகிறது. உண்மையில் நடந்தது என்ன? அது தற்காப்புக்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடா அல்லது திட்டமிட்ட என்கவுண்டரா? என்பதைக் கண்டறியும் விசாரணையே படத்தின் கதை.

FC விமர்சனம்:

2019-ல் ஹைதராபாத்தில் நடந்த என்கவுண்டர் சம்பவத்தை இந்தப் படம் நினைவுபடுத்தலாம். ஆனால், இயக்குநர் மேக்னா குல்சார் இது ஒரு குறிப்பிட்ட வழக்கை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம் கிடையாது என்றும், இந்தியாவில் இதுபோன்று தொடர்ந்து நடைபெறும் பல சம்பவங்களிலிருந்து சில விஷயங்களை எடுத்துப் படமாக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

படத்தின் மையக் கதாபாத்திரங்களாக வரும் பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் கரீனா கபூர் கான் இருவருமே தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டிருக்கிறார்கள். குறிப்பாக, என்கவுண்டர் விவகாரத்தில் இருவேறு கோணங்களில் செயல்படும் இந்த இரண்டு கதாபாத்திரங்களின் அணுகுமுறையும் கதைக்கு வலு சேர்க்கிறது. பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட ராகினியின் தாயாக நடித்திருக்கும் நடிகையின் நடிப்பும் சிறப்பாக இருக்கிறது. மற்ற துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், படத்தின் கதைக்குத் தேவையான அளவுக்கு அனைத்து அம்சங்களும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. இயக்குநர் மேக்னா குல்சாரும் எடிட்டர் சாரு ஸ்ரீயும் இணைந்து, ஒரு உண்மையான குற்றச் சம்பவத்தின் விசாரணையைப் பார்ப்பது போன்ற உணர்வைக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார்கள். குறிப்பாக, பிரித்விராஜ் சுகுமாரனுக்கு இந்த வழக்கு எப்படி ஒப்படைக்கப்படுகிறது, அவர் தனக்குக் கீழ் ஒரு குழுவை எப்படிக் கட்டமைக்கிறார், அந்தக் குழு குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கிறது என்பதையும், மறுபுறம் கரீனா கபூர் தலைமையிலான SIT குழு எப்படி விசாரணையைத் தொடங்குகிறது என்பதையும் நான்-லீனியர் முறையில் சுவாரசியமாகக் கொண்டு சென்றிருக்கிறார்கள். சில விசாரணைக் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன.

படத்தின் ஓபன் எண்டட் கிளைமாக்ஸும் குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், இதில் இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களும் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்தான். ஆனால், ஒருவர் குற்றம் நடந்தால் உடனடியாகத் தண்டனை கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார். மற்றொருவர், குற்றவாளி யாராக இருந்தாலும் சட்டத்தைத் தன் கையில் எடுத்துக்கொள்ளக் கூடாது; சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நம்புகிறார். இந்த இரண்டு பார்வைகளில் எது சரி என்று ஒரு குறிப்பிட்ட முடிவைத் திணிக்காமல், பார்வையாளர்களின் புரிதலுக்கும் முடிவுக்கும் விட்டிருக்கும் விதம் நன்றாக இருக்கிறது. இந்தக் கதைக்கு இப்படியான திறந்த முடிவுதான் பொருத்தமாக இருக்கும் என்பதும் என் கருத்து.

படத்தின் முதல் பாதி ஒரு பரபரப்பான இன்வெஸ்டிகேட்டிவ் கிரைம் திரில்லராகச் செல்கிறது. குறிப்பாக, பிரித்விராஜ் சுகுமாரன் தலைமையிலான போலீஸ் குழு உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க மேற்கொள்ளும் விசாரணை, திட்டமிடல் மற்றும் குற்றவாளிகளைச் சுற்றிவளைக்கும் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன. முதல் பாதி முழுவதும் நல்ல விறுவிறுப்புடன் செல்கிறது. ஆனால், இரண்டாம் பாதியில் அந்தப் பரபரப்பு குறைந்துவிடுகிறது. கரீனா கபூர் தலைமையிலான SIT குழு, நடந்தது உண்மையான தற்காப்புத் துப்பாக்கிச் சூடா அல்லது திட்டமிட்ட என்கவுண்டரா என்பதை விசாரிப்பதுதான் இரண்டாம் பாதியின் முக்கிய அம்சம். இந்த விசாரணையில் பல விஷயங்கள் காட்சிகளாகக் காட்டப்படுவதைவிட, உரையாடல்கள் மூலமாகவே விளக்கப்படுகின்றன. இதனால் சில இடங்களில் படம் மெதுவாக நகர்வதுடன், ஒரு ட்ரூ கிரைம் டாக்குமென்டரியைப் பார்ப்பது போன்ற உணர்வும் ஏற்படுகிறது.

முதல் பாதியில் இருந்த சினிமாட்டிக் விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் மிஸ்ஸிங். அதே நேரத்தில், ஒரு உண்மையான வழக்கை போலீஸார் எப்படி விசாரிப்பார்கள், ஒவ்வொரு ஆதாரத்தையும் எப்படி அணுகுவார்கள் என்பதை இயல்பாகக் காட்ட வேண்டும் என்பதற்காகவே இயக்குநர் இந்த அணுகுமுறையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. மேலும், இந்தப் படத்தில் எதிர்பாராத பெரிய ட்விஸ்ட்கள் அல்லது திருப்பங்கள் எதுவும் இல்லை. ஒரு உண்மையான போலீஸ் விசாரணை எப்படி நடைபெறுமோ, அதே நடைமுறையில்தான் கதை நகர்கிறது. அதனால் வழக்கமான கமர்ஷியல் கிரைம் திரில்லர்களில் எதிர்பார்க்கும் அதிரடியான திருப்பங்களை எதிர்பார்த்துச் சென்றால் ஏமாற்றம் ஏற்படலாம்.

மொத்தத்தில், இது ஆஹா, ஓஹோ என்று கொண்டாடக்கூடிய படம் இல்லை. ஆனால், மெதுவாக நகரும் விசாரணைத் திரில்லர்கள் மற்றும் போலீஸ் புரொசீஜரல் டிராமாக்கள் பிடிக்கும் ரசிகர்களுக்கு நிச்சயமாக ஒரு முறை பார்க்கக்கூடிய டீசன்ட்டான படமாக இருக்கும்.

பலம்:

  • பிரித்விராஜ் சுகுமாரன் மற்றும் கரீனா கபூரின் சிறப்பான நடிப்பு.
  • ராகினியின் தாயாக நடித்தவரின் உணர்வுப்பூர்வமான நடிப்பு.
  • சுவாரசியமாக அமைந்த முதல் பாதி விசாரணைக் காட்சிகள்.
  • நான்-லீனியர் திரைக்கதை அமைப்பு.
  • கதைக்குப் பொருத்தமான தொழில்நுட்பப் பங்களிப்புகள்.
  • பார்வையாளர்களின் முடிவுக்கு விடப்பட்ட ஓபன் எண்டட் கிளைமாக்ஸ்.

பலவீனம்:

  • இரண்டாம் பாதியில் குறையும் விறுவிறுப்பு.
  • அதிகப்படியான உரையாடல்கள் காரணமாக ஏற்படும் தொய்வு.
  • எதிர்பாராத ட்விஸ்ட், திருப்பங்கள் இல்லாத திரைக்கதை.
  • சில இடங்களில் ட்ரூ கிரைம் டாக்குமென்டரி பார்ப்பது போன்ற உணர்வு.

குடும்பத்துடன் பார்க்கலாமா?

படத்தில் பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சில உணர்வுப்பூர்வமான மற்றும் அதிர்ச்சியளிக்கக்கூடிய விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. எனவே குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்ற படம் அல்ல. இது A சான்றிதழ் பெற்ற திரைப்படம்.

இறுதியாக, ‘தாயரா’ – விறுவிறுப்பான முதல் பாதியும், பொறுமையைச் சோதிக்கும் இரண்டாம் பாதியும் கொண்ட ஒரு டீசன்ட்டான விசாரணைத் திரில்லர்!

Film Crazy Rating – 3 / 5

Leave a Comment