தி பாரடைஸ் – திரைப்பட விமர்சனம் (The Paradise Movie Tamil Review)
படக்குழு:
நடிகர்கள்: நானி, மோகன் பாபு, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, ராகவ் ஜுயல், ஈஸ்வரி ராவ்.
இசை: அனிருத் ரவிச்சந்தர்
ஒளிப்பதிவு: சி.ஹெச். சாய்
எடிட்டிங்: நவீன் நூலி
தயாரிப்பு: SLV Cinemas
இயக்கம்: ஸ்ரீகாந்த் ஒடேலா.
கதைச் சுருக்கம்:
1980-களின் பிற்பகுதியில் கதை தொடங்குகிறது. சமூகத்தில் எந்தவிதமான அடையாளமோ அங்கீகாரமோ இல்லாமல், அடிப்படை உரிமைகள்கூட மறுக்கப்பட்ட நிலையில் வாழும் ஒரு பெரிய சமூகத்தைப் பற்றிய கதைக்களம் இது. அந்தப் பகுதியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வில்லன் மோகன் பாபு, சிறுவயதிலேயே நானியின் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறார். வளர்ந்து பெரியவனான பிறகு, தன்னைப் பாதித்த வில்லனைப் பழிவாங்கக் களமிறங்குகிறார் நானி. ஆனால், அவரது போராட்டம் தனிப்பட்ட பழிவாங்கலுடன் நின்றுவிடாமல், தனது சமூகத்திற்குத் தேவையான உரிமைகளையும் அங்கீகாரத்தையும் பெற்றுத்தர வேண்டும் என்ற நோக்கமாக மாறுகிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் தி பாரடைஸ் படத்தின் கதை.
FC விமர்சனம்:
தசரா படத்திற்குப் பிறகு இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா, மீண்டும் நானியை வைத்து உருவாக்கியிருக்கும் படம் தி பாரடைஸ். 1980-களின் பிற்பகுதியைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படம், சமூக உரிமைகள், அடையாளம், ஒடுக்குமுறை மற்றும் பழிவாங்குதல் எனப் பல விஷயங்களைப் பேச முயற்சிக்கிறது. ஆனால், படத்தின் மிக முக்கியமான அம்சமாக இருப்பது அதன் வன்முறை. “வயலன்ஸ் எனக்குப் பிடிக்காது; ஆனால் வயலன்ஸில் இருக்கிறேன்” என்ற வசனத்தையே இந்தப் படத்திற்குப் பயன்படுத்தியிருக்கலாம். அந்த அளவுக்கு ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் படம் முழுவதும் நிறைந்திருக்கின்றன.
நானி, மோகன் பாபு, சோனாலி குல்கர்னி ஆகிய மூவர்தான் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள். வழக்கமாக மென்மையான இயல்புடைய கதாபாத்திரங்களில் நடிக்கும் நானி, இந்தப் படத்தில் முற்றிலும் மாறுபட்ட முரட்டுத்தனமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளிலும், உணர்ச்சிப்பூர்வமான தருணங்களிலும் தனது முழு உழைப்பையும் கொடுத்திருக்கிறார். மோகன் பாபுவின் கதாபாத்திரம் படத்தின் ஆரம்பத்திலேயே வலுவாக அறிமுகப்படுத்தப்படுகிறது. அவருடைய திரை இருப்பும், மாஸ் காட்சிகளும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. சோனாலி குல்கர்னியும் தனது கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்.
கையாடு லோஹர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பவரைப் பொறுத்தவரை, அவருக்கு வழங்கப்பட்டிருக்கும் காட்சிகளில் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. சில இடங்களில் அது தேவையற்றதாகவும் தோன்றுகிறது. ராகவ் ஜுயல், ஈஸ்வரி ராவ் உள்ளிட்ட மற்ற நடிகர்களின் கதாபாத்திரங்களும் பெரிதாக மனதில் நிற்கவில்லை. சில கேமியோ கதாபாத்திரங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன; அவற்றைச் சர்ப்ரைஸாக வைத்திருப்பதே சிறந்தது.
தொழில்நுட்ப ரீதியாகப் படம் நல்ல தரத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, கொல்லா அவினாஷின் தயாரிப்பு வடிவமைப்பு பாராட்டுக்குரியது. 1980-களின் காலகட்டத்தைச் சேர்ந்த ஒரு தனி உலகத்தையே உருவாக்கியிருக்கிறார். அதற்காகச் செலவழிக்கப்பட்ட உழைப்பும் பிரம்மாண்டமும் திரையில் தெரிகின்றன. அனிருத்தின் பாடல்கள் ஓரளவுக்கு நன்றாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக, இன்ட்ரோ பாடலும் குத்துப்பாடல்களும் திரையரங்கில் ரசிக்கக்கூடிய வகையில் இருக்கின்றன. ஆனால், பின்னணி இசை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. அனிருத்தின் வழக்கமான தரத்துடன் ஒப்பிடும்போது சுமார் ரகமாகவே இருக்கிறது.
நவீன் நூலியின் எடிட்டிங்கைப் பொறுத்தவரை, பாடல்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் தேவையான வேகத்தையும் வெட்டுகளையும் சிறப்பாகக் கொடுத்திருக்கிறார். ஆனால், கதையிலும் திரைக்கதையிலும் இருக்கும் அடிப்படையான பிரச்சனைகளை எடிட்டிங் மூலம் சரிசெய்ய முடியாத நிலைதான் தெரிகிறது. படத்தின் மிகப்பெரிய பலவீனம் அதன் பழைய பாணியிலான கதையும் திரைக்கதையும்தான். ஹீரோவின் தாயையும், அவருடைய சமூகத்தையும் கொடுமைப்படுத்திய வில்லனைப் பழிவாங்கக் கதாநாயகன் களமிறங்குவது போன்ற கதைக்களம் ஏற்கெனவே பல படங்களில் பார்த்ததுதான். 2026-ல் வெளியாகும் ஒரு படத்தில் இதே பழைய பழிவாங்கும் கதையைப் புதுமையான திரைக்கதையாகக் கொடுத்திருக்கிறார்கள் என்று எதிர்பார்த்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
அம்மா – மகன் சென்டிமென்ட் மூலம் பார்வையாளர்களை உணர்ச்சிவசப்படுத்த முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், பல காட்சிகள் இயல்பாக உருவாகாமல் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டது போலவே இருக்கின்றன. உண்மையாகவே மனதைத் தொடக்கூடிய உணர்ச்சிப்பூர்வமான காட்சிகள் மிகக் குறைவு. வன்முறையைப் பொறுத்தவரை, படம் எல்லை மீறிச் செல்கிறது. ஹீரோ மட்டும் ஆயிரக்கணக்கானவர்களைக் கொல்வது போன்ற அளவுக்கு ஆக்ஷன் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஒருவரைக் கிடத்தி அவரது கழுத்தை அறுத்து ரத்தத்தை டிரம்மில் சேகரிக்கும் காட்சி மிகவும் கொடூரமானது. வன்முறையைப் படத்தில் காட்டுவது தவறில்லை. ஆனால், அதை இவ்வளவு அதிகமாகவும், சில இடங்களில் கொண்டாடும் விதமாகவும் காட்டுவது இளம் பார்வையாளர்களிடம் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
கதாபாத்திர வடிவமைப்பும் பலவீனமாக இருக்கிறது. ஆரம்பத்தில் வலுவாக அறிமுகப்படுத்தப்படும் மோகன் பாபுவின் வில்லன் கதாபாத்திரம், இறுதியில் மிகவும் சாதாரணமாக முடிக்கப்படுகிறது. ராகவ் ஜுயலின் கதாபாத்திரத்திற்கும் பெரிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை. ஹீரோவின் தாயின் கதாபாத்திரம், ஹீரோயினின் தாயின் கதாபாத்திரம் எனப் பல கதாபாத்திரங்கள் ஆழமில்லாமல் எழுதப்பட்டிருக்கின்றன. மேலும், தூக்கில் தொங்குவது தொடர்பான காட்சிகள் நம்பகத்தன்மையே இல்லாமல் அமைந்திருக்கின்றன. ஒரு கதாபாத்திரம் ஐந்து நிமிடங்கள் தூக்கில் தொங்கிய பிறகு மீண்டும் ஸ்டூலை வைத்து இறங்குவது போன்ற காட்சிகள் பார்வையாளர்களுக்கு நகைப்பையே ஏற்படுத்துகின்றன. அதேபோல், நானி நீண்ட நேரம் தூக்கில் தொங்கியும் உயிர் பிழைப்பது போன்ற காட்சிகளும் நம்ப முடியாத வகையில் இருக்கின்றன.
இதற்கெல்லாம் மேலாகப் படத்தின் நீளம் மிகப்பெரிய பிரச்சனை. சுமார் 2 மணி நேரம் 54 நிமிடங்கள் ஓடும் இந்தப் படம், பல இடங்களில் ஒரே விஷயத்தைத் திரும்பத் திரும்பச் சொல்வது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது. முதல் பாதியில் கதாபாத்திரங்களையும் கதைக்களத்தையும் அறிமுகப்படுத்திய பிறகு, இரண்டாம் பாதியில் புதிதாகச் சுவாரஸ்யமான விஷயங்களைச் சேர்க்காமல் அதே விஷயங்களையே மீண்டும் மீண்டும் காட்டுகிறார்கள். இதனால் படம் மிகவும் நீளமாகவும் சோர்வாகவும் மாறுகிறது. மொத்தத்தில், நானியின் வித்தியாசமான நடிப்பு, பிரம்மாண்டமான தயாரிப்பு வடிவமைப்பு, சில பாடல்கள் மற்றும் ஆக்ஷன் காட்சிகள் மட்டுமே படத்தின் பலமாக இருக்கின்றன. ஆனால், பழைய கதைக்களம், பலவீனமான திரைக்கதை, ஆழமில்லாத கதாபாத்திரங்கள், அளவுக்கு அதிகமான வன்முறை மற்றும் தேவையற்ற நீளம் ஆகியவை படத்தைப் பெரிதும் பாதிக்கின்றன.
பலம்:
- நானியின் வித்தியாசமான நடிப்பு.
- மோகன் பாபுவின் திரை இருப்பு.
- சோனாலி குல்கர்னியின் நடிப்பு.
- கொல்லா அவினாஷின் பிரம்மாண்டமான தயாரிப்பு வடிவமைப்பு.
- 1980-களின் காலகட்டத்தை உருவாக்கிய விதம்.
- அனிருத்தின் சில பாடல்கள்.
- இன்ட்ரோ பாடல் மற்றும் ஆக்ஷன் காட்சிகள்.
- சில தொழில்நுட்ப அம்சங்கள்.
பலவீனம்:
- பழைய பாணியிலான பழிவாங்கும் கதை.
- சுவாரஸ்யமில்லாத திரைக்கதை.
- வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்ட அம்மா – மகன் சென்டிமென்ட்.
- அளவுக்கு அதிகமான வன்முறைக் காட்சிகள்.
- ஆழமில்லாத கதாபாத்திர வடிவமைப்பு.
- வலுவாக அறிமுகப்படுத்தப்பட்ட வில்லன் கதாபாத்திரத்தின் பலவீனமான முடிவு.
- நம்பகத்தன்மையற்ற தூக்கில் தொங்கும் காட்சிகள்.
- சுமார் மூன்று மணி நேர நீளம்.
- இரண்டாம் பாதியில் புதுமையில்லாத காட்சிகள்.
- எதிர்பார்த்த அளவுக்கு இல்லாத பின்னணி இசை.
குடும்பத்துடன் பார்க்கலாமா?
இந்தப் படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. பாலியல் காட்சிகளைவிடவும் அதிகமாக, கொடூரமான வன்முறை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் நிறைந்திருக்கின்றன. கழுத்தை அறுப்பது, கொடூரமான கொலைகள் போன்ற காட்சிகள் இடம்பெறுவதால் குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்ற படம் அல்ல. குறிப்பாக, குழந்தைகள் மற்றும் இளம் வயதினருக்கு இது பொருத்தமானதல்ல.
இறுதியாக, ‘தி பாரடைஸ்’ – நானியின் நடிப்பும் பிரம்மாண்டமும் இருக்கிறது; ஆனால் கதையும் திரைக்கதையும் காப்பாற்றத் தவறிவிட்டன!
Film Crazy Rating – 2 / 5