தி டார்க் ஹெவன் – திரைப்பட விமர்சனம் | சித்து, தர்ஷிகா, ரித்விகா

தி டார்க் ஹெவன் – திரைப்பட விமர்சனம் (The Dark Heaven Movie Tamil Review)

படக்குழு:

நடிகர்கள்: சித்து, தர்ஷிகா, ரித்விகா, பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயகுமார், சாப்ளின் பாலு, அருள் டி. சங்கர் மற்றும் பலர்

இசை: சக்தி பாலாஜி

ஒளிப்பதிவு: மணிகண்டன் பி.கே.

எடிட்டிங்: ராஜா ஆறுமுகம்

தயாரிப்பு: கோதை என்டர்டெயின்மென்ட்

இயக்கம்: எஸ். பாலாஜி.

கதைச் சுருக்கம்:

மேக்கரை என்ற கிராமத்தில் ஒரு விசித்திரமான சாபம் இருப்பதாக நம்பப்படுகிறது. அந்தச் சாபத்தின்படி, ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜூன் மாதத்தில் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர். இதற்குப் பின்னால் இருக்கும் காரணத்தைக் கண்டுபிடிப்பதற்காக, இன்ஸ்பெக்டரான கதாநாயகன் தனது குடும்பத்துடன் அந்தக் கிராமத்திற்கு வருகிறார். இதற்கிடையில், கேரளாவில் ஏற்கனவே 19 கொலைகளைச் செய்த சைக்கோ சீரியல் கில்லர் ஒருவனைப் போலீஸார் தேடிக்கொண்டிருக்கின்றனர் என்ற தகவலும் அவருக்குத் தெரிய வருகிறது. அப்படியென்றால், கிராமத்தில் நிகழும் மரணங்களுக்கும் அந்த சீரியல் கில்லருக்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா? உண்மையில் அந்த மரணங்களுக்குப் பின்னால் இருப்பது அமானுஷ்ய சக்தியா அல்லது ஒரு கொலையாளியா? இதற்கான விடையைத் தேடும் விசாரணைதான் படத்தின் கதை.

FC விமர்சனம்:

ஒரு கிராமத்திற்குச் சாபம் இருப்பதாகவும், ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கு மர்மமான மரணங்கள் நிகழ்வதாகவும் அமைக்கப்பட்டிருக்கும் படத்தின் மையக்கரு மிகவும் சுவாரசியமானது. இது உண்மையிலேயே அமானுஷ்ய சக்தியின் வேலையா அல்லது அந்த ஊரில் சுற்றிக்கொண்டிருக்கும் சீரியல் கில்லரின் செயலா என்பதைக் கண்டுபிடிக்கக் கதாநாயகன் களமிறங்குவது, கிரைம் மிஸ்ட்ரி மற்றும் இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் ரசிகர்களைக் கவரக்கூடிய கதைக்களமாக அமைந்திருக்கிறது. படத்தின் டைட்டில் கார்டு வருவதற்கு முன்பே முதல் ஐந்து நிமிடங்களில் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் அளவுக்கு விறுவிறுப்பான தொடக்கத்தை அமைத்திருக்கிறார்கள். அந்த ஆரம்பக்காட்சிகள் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்கின்றன. மேலும், படம் முழுவதும் பயணிக்கும்போது நாம் கணிக்காத ஒரு திருப்பமும் கிளைமாக்ஸில் இடம்பெறுகிறது. இரண்டாம் பாகத்திற்கான லீடும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

பிக் பாஸ் புகழ் சித்து கதாநாயகனாக நடித்திருக்கிறார். தர்ஷிகா அவருடைய மனைவியாக நடித்திருக்கிறார். ரித்விகா, பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயகுமார், சாப்ளின் பாலு, அருள் டி. சங்கர் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள். குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட திரைப்படமாக இருந்தாலும், திரையில் பார்க்கும்போது அந்தக் குறை தெரியாத அளவுக்கு தொழில்நுட்பப் பங்களிப்பு அமைந்திருக்கிறது. குறிப்பாக, மணிகண்டனின் ஒளிப்பதிவு கதைக்களத்திற்குப் பொருத்தமாக இருக்கிறது. கிராமத்தின் நிலப்பரப்பையும், கதையில் இருக்கும் மர்மமான சூழலையும் இயல்பாகவும், சில இடங்களில் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.

எடிட்டர் ராஜா ஆறுமுகம் படத்தின் ஆரம்பத்தில் நம் மனதில் பல கேள்விகளை உருவாக்கி, கிளைமாக்ஸை நெருங்கும்போது அவற்றுக்கான பதில்களை ஒன்றன்பின் ஒன்றாகக் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். கதையின் பல முடிச்சுகளைச் சரியான இடங்களில் அவிழ்க்கும் விதமும் பாராட்டத்தக்கது.  சக்தி பாலாஜியின் இசையும் படத்திற்கு முக்கியமான பலம். குறிப்பாக, கொலையாளி வயலின் வாசித்துக்கொண்டே வருவது தொடர்பான இசைக்கோர்வை மிகவும் ஹாண்டிங் ஆக அமைந்திருக்கிறது. அந்த வயலின் இசை ஒலிக்கும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு அசம்பாவிதம் நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. இது படத்தின் மர்மமான சூழலுக்கு நன்றாகப் பொருந்துகிறது.

முதல் பாதியில், கதாநாயகனுடன் சேர்ந்து பார்வையாளர்களும் ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மீதும் சந்தேகப்படும்படி திரைக்கதையை அமைத்திருக்கிறார்கள். யார் அந்தக் கொலையாளி என்ற கேள்வியைத் தொடர்ந்து எழுப்பி, சந்தேகத்தை வெவ்வேறு கதாபாத்திரங்கள் மீது மாற்றிக்கொண்டே செல்வது சுவாரசியமாக இருக்கிறது. ஆனால், படத்தின் முக்கியப் பிரச்சினை திரைக்கதையில் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டிருக்கும் கூடுதல் கதையடுக்குகள்தான். கிராமத்தில் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் மர்ம மரணங்கள், அவை அமானுஷ்யமானவையா அல்லது சீரியல் கில்லரின் செயலா என்பதைக் கண்டுபிடிக்கும் விசாரணை என்கிற மையக்கருவே படத்தைச் சுவாரசியமாகக் கொண்டு செல்லப் போதுமானது.

ஆனால், ஒரு புத்தகத்தின் வழியாக அடுத்தடுத்து நடக்கப்போகும் சம்பவங்களை அறிந்துகொள்ளும் கதையம்சம், தசரதன் வனமங்கை தொடர்பான தனி அடுக்கு, எழுத்தாளர் மாணிக்கம் மற்றும் அவரது மகள் தொடர்பான காட்சிகள் எனப் பல விஷயங்களை ஒரே கதைக்குள் சேர்த்திருக்கிறார்கள். இதனால் சில இடங்களில் தேவையற்ற குழப்பம் ஏற்படுகிறது. இந்தக் கூடுதல் கதையடுக்குகள் இல்லாமலேயே மையக் கதையை இன்னும் தெளிவாகவும் நேர்த்தியாகவும் சொல்லியிருக்க முடியும் என்ற எண்ணம் ஏற்படுகிறது. குறிப்பாக, அந்தப் புத்தகத்தைப் படிப்பவர்களுக்கு எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது, அவர்களுடைய மரணம் எப்படி நிகழப்போகிறது, யாரால் நிகழப்போகிறது என்பது வரையிலும் தெரியும் என்று சொல்லப்படுகிறது. அப்படியிருக்கும்போது, நிழல்கள் ரவி ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்துக்கு தனது மரணத்திற்கான காரணம் தெரிந்திருந்தும், அதைப் பற்றி ஏன் யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை என்ற கேள்வி எழுகிறது.

அதேபோல், கொலையாளியைக் கண்டுபிடிப்பதற்காகக் கதாநாயகன் மேற்கொள்ளும் சில விசாரணை நடவடிக்கைகளும், கிளைமாக்ஸை நோக்கிச் செல்லும்போது ஜெயகுமார் கதாபாத்திரத்துடன் இணைந்து ஒரு வீட்டுக்குள் சென்று இரண்டு புகைப்படங்களை எடுக்கும் சம்பவமும் இன்னும் நம்பும்படியாக விளக்கப்பட்டிருக்கலாம். இதையெல்லாம் விட முக்கியமான குறை என்னவென்றால், படத்தில் எதிர்மறையான சாயல் கொண்ட ஒரு முக்கியக் கதாபாத்திரத்தை கிளைமாக்ஸுக்கு முன்பாகவே வெளிப்படுத்திவிடுகிறார்கள். அந்தக் கதாபாத்திரத்தை அப்போதே வெளிப்படுத்தாமல், கிளைமாக்ஸில் அறிமுகப்படுத்தியிருந்தால் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்குமோ என்ற எண்ணம் வருகிறது. இதற்கு மேல் சொன்னால் ஸ்பாய்லராகிவிடும் என்பதால், அந்த விஷயத்தைப் படத்தில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

மொத்தத்தில், சுவாரசியமான மையக்கருவைக் கொண்டிருந்தாலும், அதைச் சுற்றி தேவையற்ற பல கதையடுக்குகளைச் சேர்த்திருப்பதால் சில இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்தும் திரைப்படமாகவே இது இருக்கிறது. இருந்தாலும், ஆரம்பத்தில் கிடைக்கும் விறுவிறுப்பும், தொழில்நுட்பப் பங்களிப்புகளும், கிளைமாக்ஸில் வரும் எதிர்பாராத திருப்பமும் படத்தை ஒரு முறை பார்க்க வைக்கின்றன.

பலம்:

  • வித்தியாசமான மற்றும் சுவாரசியமான மையக்கரு.
  • முதல் ஐந்து நிமிடங்களிலேயே ஏற்படுத்தும் விறுவிறுப்பு.
  • சித்துவின் நடிப்பு மற்றும் துணை நடிகர்களின் பங்களிப்பு.
  • மணிகண்டனின் ஒளிப்பதிவு.
  • சக்தி பாலாஜியின் பின்னணி இசை, குறிப்பாக ஹாண்டிங் வயலின் இசை.
  • ராஜா ஆறுமுகத்தின் நேர்த்தியான எடிட்டிங்.
  • கிளைமாக்ஸில் வரும் எதிர்பாராத திருப்பம்.

பலவீனம்:

  • தேவையில்லாமல் சேர்க்கப்பட்ட கூடுதல் கதையடுக்குகள்.
  • சில இடங்களில் ஏற்படும் திரைக்கதை குழப்பங்கள்.
  • புத்தகத்தின் கதையம்சம் தொடர்பான லாஜிக் கேள்விகள்.
  • சில விசாரணைக் காட்சிகள் இன்னும் நம்பும்படியாக அமைந்திருக்கலாம்.
  • முக்கியமான கதாபாத்திரத்தை முன்கூட்டியே வெளிப்படுத்தியது.

குடும்பத்துடன் பார்க்கலாமா?

படத்தில் ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகளும், கடுமையான வார்த்தைப் பயன்பாடும் இடம்பெற்றுள்ளன. பாலியல் காட்சிகள் எதுவும் இல்லை. UA 16+ சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பது பொருத்தமானது.

இறுதியாக, ‘தி டார்க் ஹவன்’ – சுவாரசியமான மர்மக் கதைக்குள் தேவையற்ற முடிச்சுகளைப் போட்டாலும், ஒரு முறை பார்க்க வைக்கும் கிரைம் மிஸ்ட்ரி திரில்லர்!

Film Crazy Rating – 2.5 / 5 

Leave a Comment