இந்திய சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படங்களில் ஒன்றாக ‘ராமாயணம்’ திரைப்படம் உருவாகி வருகிறது. நிதேஷ் திவாரி இயக்கத்தில், நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் உலகம் முழுவதும் நவம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் ரூ.4,000 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் இணைந்து இசையமைத்துள்ளனர். இதில் ராமராக ரன்பீர் கபூரும், ராவணனாக யாஷும், சீதையாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நடிகை சாய் பல்லவி கலந்து கொண்டு ராவணன் கதாபாத்திரம் குறித்து பேசியுள்ளார். அப்போது அவர், ராவணனை நாம் முற்றிலும் தீயவராக மட்டும் பார்க்கக்கூடாது என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
மேலும், ராவணன் ஒரு சிறந்த அறிஞராகவும், சிவபெருமானின் தீவிர பக்தராகவும் பல்வேறு கலைகளில் தேர்ச்சி பெற்றவராகவும் இருந்தார். அதே நேரத்தில் அவர் செய்த தவறுகளும் அவரது வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தன. இதுகுறித்து பேசிய சாய் பல்லவி, “நாம் அனைவரும் ராவணனை ஓர் உதாரணமாக எடுத்துக்கொண்டு, நமக்குள் இருக்கும் நல்ல குணங்கள் மற்றும் தீய குணங்கள் குறித்து சுயபரிசோதனை செய்ய வேண்டும். ராவணன் முற்றிலும் கெட்டவர் அல்ல. நமக்குள் இருக்கும் ராவணனை அடையாளம் கண்டு, காலப்போக்கில் நம்மை நாமே மாற்றிக்கொள்வது மிகவும் முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
சாய் பல்லவியின் இந்த கருத்து தற்போது சினிமா ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது. ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்களை புதிய கோணத்தில் திரையில் காண ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.