தமிழகத்தில் திரையரங்குகளில் திரைப்படங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதனால் விரைவில் சினிமா டிக்கெட் விலை உயருமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தமிழகத்தில் திரையரங்குகளை நடத்துவதற்கான மின்சாரக் கட்டணம், சொத்து வரி, ஊழியர்களின் சம்பளம் மற்றும் பராமரிப்புச் செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. மேலும், ஓடிடி தளங்களின் வருகையால் திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், தமிழக முதல்வர் விஜய்யிடம் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் 9 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

அதில் முக்கியமாக, தற்போது வரிகள் மற்றும் பராமரிப்புக் கட்டணங்களைத் தவிர்த்து அதிகபட்சமாக ரூ.150 ஆக இருக்கும் சினிமா டிக்கெட் கட்டணத்தை ரூ.250 ஆக உயர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கும் ஒருமுறை டிக்கெட் கட்டணத்தை 10 சதவீதம் உயர்த்திக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும் என்றும், ஒரு டிக்கெட்டுக்கான பராமரிப்புக் கட்டணத்தை ரூ.6-ல் இருந்து ரூ.10 ஆக அதிகரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதவிர, திரையரங்குகளுக்கான மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க வேண்டும், டிஜிட்டல் புரொஜெக்டர்களை இயக்க உரிமம் பெற்ற ஆபரேட்டர் கட்டாயம் என்ற விதியை நீக்க வேண்டும், ஏற்கனவே உள்ள திரையரங்குகளில் கூடுதல் திரைகள் அமைப்பதற்கான அனுமதிகளை எளிமைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் இடம்பெற்றுள்ளன. அதேபோல், திரையரங்குகளில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மற்றொரு முக்கிய கோரிக்கையாக, தற்போது காலை 9 மணி முதல் தொடங்கும் திரையரங்குகளின் காட்சிகளை காலை 6 மணி முதலே தொடங்க அனுமதிக்க வேண்டும் என்றும், நள்ளிரவு 2 மணி வரை திரையிட அனுமதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். திரையரங்குகளை நடத்துவதில் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சிக்கல்களைச் சமாளிக்கவே இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கைகளை தமிழக அரசு ஏற்றுக்கொண்டால் சினிமா டிக்கெட் கட்டணத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், டிக்கெட் விலை உயர்வு குறித்த இறுதி முடிவு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகே தெரியவரும். டிக்கெட் விலை உயர்ந்தால் திரையரங்குகளுக்கு ரசிகர்கள் வருகை அதிகரிக்குமா அல்லது குறையுமா என்ற விவாதமும் தற்போது சினிமா வட்டாரத்தில் எழுந்துள்ளது.