இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்து வரும் திரைப்படம் ‘பாக்கெட் நாவல்’. ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதியும் தியாகராஜன் குமாரராஜாவும் மீண்டும் இணைந்துள்ளதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதியுடன் மாளவிகா மோகனன், கன்னட நடிகர் ராஜ் பி ஷெட்டி, கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.
முன்னதாக, ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், படப்பிடிப்பு நிறைவு குறித்த அறிவிப்பு வெளியானபோது படத்தின் தொழில்நுட்பக் குழுவில் இளையராஜாவின் பெயர் இடம்பெறவில்லை. இதனால், இயக்குநர் தியாகராஜன் குமாரராஜாவுக்கும் இளையராஜாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் படத்திலிருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகின. அவருக்குப் பதிலாக ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இந்தத் தகவலை தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. அதன்படி, ‘பாக்கெட் நாவல்’ திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். இதனை அறிவிக்கும் வகையில் படக்குழு வெளியிட்டுள்ள வீடியோவில் ஜி.வி.பிரகாஷ் இடம்பெற்றுள்ளார். மேலும், இனி இது வதந்தி அல்ல, அதிகாரப்பூர்வமான அறிவிப்பு என்ற வாசகத்துடன் இந்தத் தகவலைப் பகிர்ந்துள்ளனர்.
‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி – தியாகராஜன் குமாரராஜா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள நிலையில், தற்போது ஜி.வி.பிரகாஷின் வருகையும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இப்படம் தமிழ், கன்னடம் உள்ளிட்ட நான்கு மொழிகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் வெளியீட்டுத் தேதி மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
இளையராஜா இசையமைப்பார் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு இந்த மாற்றம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தியாகராஜன் குமாரராஜா – ஜி.வி.பிரகாஷ் கூட்டணியின் இசை எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Announcement Video: