இம்மார்டல் – திரைப்பட விமர்சனம் | ஜி.வி. பிரகாஷ் குமார், கயாடு லோஹர்

இம்மார்டல் – திரைப்பட விமர்சனம் (Immortal Movie Tamil Review)

படக்குழு:

நடிகர்கள்: ஜி.வி. பிரகாஷ் குமார், கயாடு லோஹர், டி.எம். கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்ய கதிர்

இசை: சாம் சி.எஸ்.

ஒளிப்பதிவு: அருள் ராதாகிருஷ்ணன்

எடிட்டிங்: M. ராஜேஷ்

தயாரிப்பு: AK Film Factory

இயக்கம்: மாரியப்பன் சின்னா.

கதைச் சுருக்கம்:

ஒரு பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை பார்த்து வரும் கதாநாயகன் ஜி.வி. பிரகாஷ், வாடகைக்கு ஒரு அறை தேடிக்கொண்டிருக்கிறார். அப்போது கயாடு லோஹரின் வீட்டில் காலியாக இருக்கும் அறையை மாதம் ₹1,000 வாடகைக்குத் தருவதாகச் சொல்ல, அந்த வீட்டில் தங்க முடிவு செய்கிறார். ஆனால், அந்த வீட்டைப் பார்க்கச் சென்றவர் அறையைவிட அதன் உரிமையாளரான கயாடு லோஹர் மீது காதல் வயப்படுகிறார். அவர் எடுத்த இந்த முடிவு தனது வாழ்க்கையையே தலைகீழாக மாற்றப்போகிறது என்பது அவருக்குத் தெரியாது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

FC விமர்சனம்:

மாரியப்பன் சின்னா எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படம் ஒரு வித்தியாசமான ஃபேண்டஸி திரில்லர். இதே மாதிரியான கதைக்களத்தில் உலக அளவில் பல திரைப்படங்கள் வந்திருந்தாலும், தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இது ஒரு வித்தியாசமான முயற்சி என்று சொல்லலாம். இந்தப் படத்தை ஒரு மினிமலிஸ்டிக் திரைப்படம் என்றே குறிப்பிடலாம். ஒரு அப்பார்ட்மெண்ட், அதில் இருக்கும் ஒரு ஃபிளாட், ஒரு பிரிண்டிங் பிரஸ் எனச் சில லொகேஷன்களையும், ஐந்து அல்லது ஆறு நடிகர்களையும் வைத்தே மொத்தப் படத்தையும் உருவாக்கியிருக்கிறார்கள். எங்கு செலவழிக்க வேண்டுமோ அங்கு மட்டும் கவனம் செலுத்தி, தொழில்நுட்ப அம்சங்களில் படக்குழு அதிக உழைப்பைக் கொடுத்திருக்கிறது.

குறிப்பாக, அருணின் ஒளிப்பதிவு, சாம் சி.எஸ்ஸின் இசை, சவுண்ட் டிசைனிங் குழுவின் பங்களிப்பு ஆகியவை படத்தின் மேக்கிங்கிற்கு வலுசேர்க்கின்றன. தேவையான இடங்களில் இடம்பெறும் எஸ்.எஃப்.எக்ஸ் வேலைப்பாடுகளும் நேர்த்தியாக அமைந்துள்ளன. குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டிருந்தாலும், தொழில்நுட்ப ரீதியாகத் தரமான படமாகக் கொண்டுவரப் படக்குழு முயற்சி செய்திருப்பது தெரிகிறது. இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் முதல் பாதிதான். ஒரு பக்கம் ரொமான்ஸ், இன்னொரு பக்கம் மர்மமான விஷயங்கள் என இரண்டையும் கலந்து, ஏதோ ஒரு சம்பவம் நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்கி முதல் பாதியைக் கொண்டுசெல்கிறார்கள். குறிப்பாக, படத்தின் தொடக்கத்திலேயே இடம்பெறும் ஒரு சிறிய சர்ப்ரைஸ் எலிமென்ட் கதைக்கு நன்றாகப் பொருந்தியிருக்கிறது. அந்தத் தருணம் படத்தின் மீதான ஆர்வத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்கிறது.

கிளைமாக்ஸிலும் ஒரு சிறிய ஆச்சரியமான அம்சத்தை வைத்திருக்கிறார்கள். அது பெரிய ட்விஸ்ட் என்று சொல்ல முடியாவிட்டாலும், கதைக்கு ஒரு வித்தியாசமான நிறைவைக் கொடுக்கிறது. நடிப்பைப் பொறுத்தவரை, ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு லோஹர் ஆகிய இருவரும்தான் படத்தின் முக்கியமான கதாபாத்திரங்கள். இருவருமே தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நேர்த்தியாகக் கையாண்டிருக்கிறார்கள். குறிப்பாக, கயாடு லோஹருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அவரும் அந்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.  இவர்களைத் தவிர டி.எம். கார்த்திக், குமார் நடராஜன், லொள்ளு சபா மாறன், ஆதித்ய கதிர் உள்ளிட்ட நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட சிறிய கதாபாத்திரங்களைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

ஆனால், படத்தின் பிரச்சனைகள் முதல் பாதியிலேயே ஆங்காங்கே தொடங்கிவிடுகின்றன. குறிப்பாக, ஆகாஷ் என்ற கதாபாத்திரத்தின் மூலம் கதாநாயகனுக்கு ஒரு முக்கியமான விஷயம் தெரியவருகிறது. ஆனால், முதல் முறையாக அதைக் கேட்கும்போது பெரிதாக எந்த எதிர்வினையும் காட்டாத கதாநாயகன், அதே விஷயத்தை இரண்டாவது முறையாகக் கேட்கும்போது மிகப்பெரிய அதிர்ச்சியடைகிறார். முதல் முறையிலேயே ஏன் அவருக்கு அந்த அதிர்ச்சி ஏற்படவில்லை என்ற கேள்வி எழுகிறது.

அதேபோல், ஒரு கதாபாத்திரம் ஜி.வி. பிரகாஷுடன் நீண்ட காலம் வாழ வேண்டும், குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற அளவுக்குப் பேசுகிறது. ஆனால், மற்றவர்களிடம் இல்லாத அளவுக்கு கதாநாயகன் மீது மட்டும் அந்தக் கதாபாத்திரத்துக்கு ஏன் இவ்வளவு அக்கறை இருக்கிறது என்பதற்கான அழுத்தமான காரணம் படத்தில் சொல்லப்படவில்லை. அதை இன்னும் நம்பும்படியாக எழுதியிருக்கலாம். மேலும், முதல் பாதியில் ஒரு முக்கியமான மர்ம விஷயத்தை ஆகாஷ் கதாபாத்திரத்தின் மூலமாகப் படக்குழு ரசிகர்களுக்கும் முன்கூட்டியே வெளிப்படுத்திவிடுகிறது. அதுவரை ஏதோ ஒரு மர்மம் இருக்கிறது என்று யோசித்துக்கொண்டிருந்த நமக்கு, அதற்கான பதில் கிடைத்துவிடுகிறது. இதனால் இரண்டாம் பாதிக்குள் நுழையும்போதே கிளைமாக்ஸில் என்ன நடக்கப்போகிறது என்பதை ஓரளவுக்குக் கணிக்க முடிகிறது.

அந்த ஒரு விஷயத்தை மட்டும் ரசிகர்களுக்கு முன்கூட்டியே வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால், இடைவேளைக் காட்சிக்குப் பிறகும் இன்னும் அதிகமான பதற்றத்தையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கியிருக்க முடியும். ஆனால், அதை முன்கூட்டியே சொல்லிவிட்டதால் இரண்டாம் பாதியில் அந்த மர்மத்துக்கான சுவாரஸ்யம் குறைந்துவிடுகிறது. இரண்டாம் பாதியில் கதையை நேரடியாக முக்கியமான மோதலை நோக்கி நகர்த்தாமல், சில விஷயங்களைச் சுற்றிச் சுற்றி மெதுவாகக் கொண்டு செல்கிறார்கள். இதனால் சில இடங்களில் திரைக்கதையின் வேகம் குறைகிறது. ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் முக்கியமான தருணத்தை அடைவதற்கே அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள்.

இது ஒரு ஃபேண்டஸி திரில்லர் என்பதால் லாஜிக் விஷயங்களைப் பெரிதாக ஆராய முடியாது. இருந்தாலும், சில இடங்களில் லாஜிக் தொடர்பான கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. மொத்தத்தில், ஒரு நேர்த்தியான முதல் பாதியும், ஓகேவான இரண்டாம் பாதியும் சேர்ந்ததுதான் இந்த இம்மார்டல். வித்தியாசமான கதைக்களம், குறைந்த லொகேஷன்களில் உருவாக்கப்பட்ட மேக்கிங் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களுக்காக ஒருமுறை பார்க்கலாம்.

பலம்:

  • வித்தியாசமான ஃபேண்டஸி திரில்லர் கதைக்களம்.
  • சுவாரஸ்யமாக அமைந்த முதல் பாதி.
  • ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயாடு லோஹரின் நடிப்பு.
  • குறைந்த பட்ஜெட்டில் நேர்த்தியான மேக்கிங்.
  • அருணின் ஒளிப்பதிவு.
  • சாம் சி.எஸ்ஸின் இசை.
  • சிறப்பான சவுண்ட் டிசைனிங் மற்றும் எஸ்.எஃப்.எக்ஸ்.
  • தொடக்கத்தில் இடம்பெறும் சர்ப்ரைஸ் எலிமென்ட்.

பலவீனம்:

  • இரண்டாம் பாதியில் குறையும் திரைக்கதை வேகம்.
  • முக்கியமான மர்ம விஷயத்தை முன்கூட்டியே வெளிப்படுத்தியது.
  • சில கதாபாத்திரங்களின் செயல்பாடுகளுக்கு அழுத்தமான காரணங்கள் இல்லை.
  • சில இடங்களில் லாஜிக் தொடர்பான கேள்விகள்.

குடும்பத்துடன் பார்க்கலாமா?

லைவ் ஆக்ஷன் காட்சிகளில் பாலியல் அம்சங்கள் எதுவும் இடம்பெறவில்லை. ஆனால் அனிமேஷன் காட்சிகளில் ஒரு லிப்-லாக் காட்சி இடம்பெற்றுள்ளது. மேலும், லேசான ரத்தம் தெறிக்கும் காட்சிகளும் இருப்பதால் UA 16+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இறுதியாக, ‘இம்மார்டல்’ – வித்தியாசமான கதைக்களமும் சுவாரஸ்யமான முதல் பாதியும் கொண்ட, இரண்டாம் பாதியில் வேகம் குறையும் ஒரு ஓகேவான ஃபேண்டஸி திரில்லர்!

Film Crazy Rating – 2.5 / 5

Leave a Comment