அக்கா – வெப் சீரீஸ் விமர்சனம் (Akka Web Series Review)
படக்குழு:
நடிகர்கள்: கீர்த்தி சுரேஷ், ராதிகா ஆப்தே, தன்வி ஆஸ்மி, ஜெயஸ்ரீ, நிவேதிதா பார்கவா, பூர்ணிமா இந்திரஜித், அன்ஷுமான் புஷ்கர்
இசை: ஜான் ஸ்டீவர்ட் எடுரி
ஒளிப்பதிவு: பிரதிக் ஷா
எடிட்டிங்: சன்யுக்தா காசா
தயாரிப்பு: YRF Entertainment
இயக்கம்: தர்மராஜ் ஷெட்டி.
கதைச் சுருக்கம்:
1980-களில் பெருநூறு என்ற பகுதியில் கதை தொடங்குகிறது. சுமார் கடந்த 800 ஆண்டுகளாக அந்த ஊர் பெண்களின் ஆட்சியின் கீழ் இயங்கி வருகிறது. அங்கு பெண்களுக்கே அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கு எந்தவிதமான மரியாதையும் அதிகாரமும் கிடையாது. சாராய வியாபாரம் முதல் தங்கக் கடத்தல் வரை பல்வேறு சட்டவிரோதத் தொழில்களையும் பெண்களே முன்னின்று நடத்துகின்றனர். அந்த ஊரின் தலைமைப் பொறுப்பில் இருப்பவரை அனைவரும் ‘அக்கா’ என்று அழைக்கின்றனர். அடுத்த அக்காவாக யார் வருவார்கள் என்பதற்கும் ஒரு எழுதப்படாத விதி இருக்கிறது. தற்போதைய அக்காவுக்குப் பிறக்கும் குழந்தை பெண்ணாக இருந்தால், அவரே அடுத்த தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும். ஆண் குழந்தையாகப் பிறந்தால் அவருக்கு அதிகாரத்தில் இடமில்லை. இப்படிப்பட்ட அதிகார அமைப்புக்குள், தனிப்பட்ட பழிவாங்கும் எண்ணத்துடன் ஒரு பெண் களமிறங்குகிறார். அதன் பிறகு அந்த ஊரில் என்னென்ன சம்பவங்கள் நடைபெறுகின்றன என்பதுதான் இந்தத் தொடரின் மீதிக்கதை.
FC விமர்சனம்:
நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் தமிழ் டப்பிங்கில் வெளியாகியுள்ள அக்கா வெப் சீரிஸ், பெண்களின் ஆதிக்கத்தில் இயங்கும் ஒரு வித்தியாசமான கிராமத்தையும், அங்கு நடைபெறும் அதிகாரப் போட்டி மற்றும் பழிவாங்கும் சம்பவங்களையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. நடிகர்களை பொறுத்தவரை தொடரின் மையக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே இருவரும் இத்தொடரின் பலம் என்பதை உணர்ந்து இருவருமே மிகச் சிறந்த நடிப்பை தந்துள்ளனர். குறிப்பாக, கிளைமாக்ஸில் கீர்த்தி சுரேஷுடன் ராதிகா ஆப்தே இடம்பெறும் மோதல் காட்சியில் அவரது வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. அன்ஷுமன் புஷ்கர், விகாஷ் நாயர், பூர்ணிமா இந்திரஜித் ஆகியோர் முக்கியத்துவம் கொண்ட துணைக் கதாபாத்திரங்களில் தேவையான நடிப்பை வழங்கியுள்ளனர். இவர்களைத் தவிர, ஏராளமான கதாபாத்திரங்கள் தொடரில் வந்து செல்கின்றன. ஆனால், ஒரு சிலரைத் தவிர மற்ற கதாபாத்திரங்களுக்கு அழுத்தமான முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
கதைக்களத்திற்கேற்ற காட்சிகளை அழகாகப் படமாக்கியுள்ள ஒளிப்பதிவு, 1980-களின் பின்னணியை உருவாக்குவதில் புரொடக்ஷன் டிசைன், ஆடை வடிவமைப்பு மற்றும் மேக்கப் குழுவினரின் சிறப்பான பங்களிப்பு என இந்தத் தொடரின் மிகப்பெரிய பலம் அதன் தொழில்நுட்ப கலைஞர்கள்தான். 5 எபிசொடுகளே இருந்தாலும் கடைசி 2 எபிசோடுகள் தான் விறுவிறுப்பாக செல்கிறது. கீர்த்தி சுரேஷ் மற்றும் ராதிகா கதாபாத்திரங்களைத் தவிர மற்ற பல கதாபாத்திரங்களுக்கு போதுமான முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. ஏராளமான கதாபாத்திரங்கள் வந்தாலும், அவற்றில் பெரும்பாலானவை மனதில் நிற்பதில்லை. ஒவ்வொரு எபிசோடும் முடிவடையும்போது அடுத்த எபிசோடைப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படவில்லை. திரைக்கதையில் விறுவிறுப்பும் எதிர்பார்ப்பும் குறைவாகவே இருக்கின்றன.
வெவ்வேறு காலகட்டங்களில் கதை நகர்வது சில இடங்களில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. இதனால் கதையின் முக்கியமான சம்பவங்கள்கூட பார்வையாளர்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பொதுவாக நல்லவர்கள் வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை பார்வையாளர்களிடம் உருவாக்குவது வழக்கம். ஆனால், இந்தத் தொடரில் முக்கியமான கதாபாத்திரங்களே குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களாக இருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு ஏதாவது நடந்துவிடக்கூடாது என்ற உணர்வு பார்வையாளர்களிடம் உருவாகவில்லை. தொழில்நுட்ப அம்சங்கள் சிறப்பாக இருந்தாலும், பலவீனமான திரைக்கதை, அதிகமான கதாபாத்திரங்கள், குழப்பமான கதை சொல்லும் முறை மற்றும் உணர்ச்சிபூர்வமான தாக்கம் இல்லாமை ஆகியவை தொடரின் அனுபவத்தைப் பாதிக்கின்றன.
குடும்பத்துடன் பார்க்கலாமா? – இந்தத் தொடரில் நிர்வாணம், வன்முறை மற்றும் பாலியல் ரீதியான சில காட்சிகளும், கடுமையான வார்த்தைப் பிரயோகங்களும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, தமிழ் டப்பிங்கில் பயன்படுத்தப்பட்டுள்ள சில வார்த்தைகள் மிகவும் கடுமையாக இருக்கின்றன. எனவே, குடும்பத்துடன் பார்க்கும் முன்பு இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இறுதியாக, ‘அக்கா’ மிகவும் சுமாரான வெப் சீரிஸ்
Film Crazy Rating – 2.5 /5