ராமாயணா – திரைப்பட விமர்சனம் | ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி

ராமாயணா – திரைப்பட விமர்சனம் (Ramayana: Part 1 Movie Review)

படக்குழு:

நடிகர்கள்: ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி, ரவி தூபே, சன்னி தியோல், ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர்.

இசை: ஏ.ஆர்.ரஹ்மான் & ஹான்ஸ் சிம்மர்

ஒளிப்பதிவு: பங்கஜ் குமார், மகேஷ் லிமாயே

எடிட்டிங்: ஹுஸேஃபா லோகண்ட்வாலா

தயாரிப்பு: பிரைம் போகஸ் ஸ்டுடியோஸ் & மான்ஸ்டர் மைன்ட் கிரியேஷன்ஸ்

இயக்கம்: நிதேஷ் திவாரி.

கதைச் சுருக்கம்:

ராமாயணத்தின் கதை அனைவருக்கும் ஏற்கெனவே தெரிந்த ஒன்றுதான். எனினும் ஓரிரு வரிகளில், அசுரக் குலத்தினரை அடிமைகளாக நடத்தும் தேவர்கள், இலங்கையையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகின்றனர். இதனால் ஆத்திரமடையும் இலங்கை ராணியின் மகனான ராவணன், பிரம்மனை நோக்கிக் கடும் தவம் மேற்கொள்கிறான். அவனது தவத்திற்குப் பலனாக, மனிதனைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் ஏற்படக்கூடாது என்ற வரத்தைப் பெறுகிறான். இதன் மூலம் தனது பலத்தைப் பயன்படுத்தி மூவுலகையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறான். ராவணனின் அட்டூழியங்களுக்கு முடிவு கட்ட விஷ்ணு, தசரத மன்னனின் மகனாக ராமர் அவதாரம் எடுக்கிறார். பின்னர் சீதையை திருமணம் செய்துகொள்ளும் ராமர், தனது அவதாரத்தின் நோக்கத்தையும் பிறவிக்கான காரணத்தையும் அறிந்துகொள்ளும் பயணமே ‘ராமாயணா’ முதல் பாகத்தின் மையக்கதையாக அமைந்துள்ளது.

FC விமர்சனம்:

நாம் பல வடிவங்களில் இந்த இராமாயணம் கதையை பார்த்திருப்போம். ஆனால் இப்படத்தில் அந்தக் கதையை எப்படிக் காட்சிப்படுத்தியிருக்கிறார்கள் என்பதில்தான் இப்படத்தின் முக்கியத்துவம் இருக்கிறது. இந்தப் படம் இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகியிருப்பது முதல் பாகம். ராமர், சீதை, லட்சுமணன், ராவணன் உள்ளிட்ட முக்கியக் கதாபாத்திரங்களையும், இதிகாசத்தின் முக்கியமான சம்பவங்களையும் பிரம்மாண்டமான திரை அனுபவமாகக் கொண்டு வர முயற்சித்திருக்கிறார்கள்.

நடிகர்களை பொறுத்தவரை, ராமராக வரும் ரன்பீர் கபூர், ராமரின் அமைதியான, நிதானமான குணத்தை வெளிப்படுத்தும் வகையில் நடித்துள்ளார். ஆரம்பத்தில் ராமராக அவரை ஏற்றுக்கொள்ளச் சற்று நேரம் எடுத்துக்கொண்டாலும், படம் நகர நகர அந்தக் கதாபாத்திரத்திற்குள் அவர் மாறியிருக்கும் விதம் நன்றாக இருக்கிறது. சீதையாக சாய் பல்லவி மிளிர்கிறார், படம் தொடங்கப்பட்டதிலிருந்தே இதற்கு சரியாக இருக்கமாட்டார்? உருவகேலி என பல கேலி, கிண்டலை எதிர்கொண்ட சாய் பல்லவியும் தனது நடிப்பால் அவற்றை உடைத்துள்ளார். கதாப்பாத்திரத்திற்கு என்னவோ அதை திறம்பட செய்துள்ளார்.

முதல் பாகத்தில் ராவணனை தான் முதன்மையாக வைத்து படமாகியுள்ளது போல ராவணனாக வரும் யஷ் படமுழுக்க மிரட்டியுள்ளார். தனது கம்பீர உருவமும், அதற்கேற்ற திமிர்கொண்ட நடிப்பும் வெகுவாக கவர்கிறது. குறிப்பாக, ராமரிடம் போரிடுவதற்கு முன்பு தனது பத்து தலைகளின் வழியாகப் பல்வேறு கருத்துகள் வெளிப்படும் காட்சி கவனம் ஈர்க்கிறது. இவர்களைத் தவிர, லட்சுமணனாக வரும் ரவி துபே, சூர்ப்பனகையாக வரும் ரகுல் ப்ரீத் சிங், மண்டோதரியாக வரும் காஜல் அகர்வால், தசரதனாக வரும் அருண் கோவில் என அனைவருமே தங்களுக்கான பாத்திரங்களுக்கு தேவையான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் சிம்மர் இணைந்துள்ள இசை இப்படத்தின் முக்கியமான பலங்களில் ஒன்று. இருப்பினும் பாடல்கள், மற்றும் சில இடங்களில் வரும் பின்னணி இசை பயன்பாடு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். இப்படத்தின் மிகப்பெரிய பலமே CGI மற்றும் VFX வேலைகள் தான், பல இடங்களில் பிரமிக்க வைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக, ராவணன் – ஜடாயு இடையிலான ஆக்‌ஷன் காட்சிகள் மிரட்டல் ரகம். சின்ன சின்ன விவரங்களைக்கூட கவனமாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார்கள். அதேபோல, பிரம்மாண்டமான காட்சிகளையும் இதிகாச உலகத்தையும் திரையில் அழகாகக் கொண்டு வந்துள்ள ஒளிப்பதிவும், அதற்கான பிரம்மாண்ட அரண்மனைகள், ஆடைகள் நேர்த்தியான தேர்வு.

இவ்வளவு சிறப்புகள் இருந்தாலும், சில குறைகளும் படம் நெடுக வரத்தான் செய்கிறது. ராவணனின் அறிமுகத்திற்கு வழங்கப்பட்ட பிரம்மாண்டத்துடன் ஒப்பிடும்போது ராமரின் அறிமுகக் காட்சி இன்னும் வலுவாக அமைந்திருக்கலாம். அதைவிட ராமர் மற்றும் சீதை கதாபாத்திரங்களை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்ளச் சில நிமிடங்கள் தேவைப்படுகின்றது அதுவே படத்திற்கு பின்னடைவை ஏற்படுத்துகிறது.

பலம்:

  • யஷ்ஷின் வலுவான ராவணன் கதாபாத்திரம்.
  • ராவணன் – ஜடாயு இடையிலான பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சி.
  • சிறிய விவரங்களையும் கவனித்துக் காட்சிப்படுத்தியிருக்கும் விதம்.
  • உயர்தரமான CGI, VFX மற்றும் ஒளிப்பதிவு.
  • 3D காட்சிகளின் சிறப்பான ஆழம்

பலவீனம்:

  • ராமர் & சீதை பாத்திரங்கள் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்
  • ஆங்காங்கே கொஞ்சம் மெதுவாக நகரும் காட்சிகள்.
  • முதல் பாதி அளவிற்கு இரண்டாம் பாதி எமோஷ்னல் கனேக்ட் இல்லாமல் போனது.
  • சிலகாட்சிகளில் பின்னணி இசை இன்னும் சிறப்பான இருந்திருக்கலாம்.

குடும்பத்துடன் பார்க்கலாமா? – இதிகாச கதை தான் இருப்பினும்  சில இடங்களில் ரத்தம் தெறிக்கும் வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனவே குழந்தைகளுடன் பார்க்கும்போது வயது வரம்பையும் தணிக்கைச் சான்றிதழையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறுதியாக, ‘ராமாயணா – 1’ பிரம்மாண்ட விஷ்வல் ட்ரீட்

Film Crazy Rating – 3.75 /5

Leave a Comment