மோகன்லால் – அனூப் சத்யன் இணையும் புதிய படம்! L368

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் தொடங்கியுள்ளது. இயக்குநர் சத்யன் அந்திக்காட்டின் மகனும், ‘வரனே அவஷ்யமுண்டு’ படத்தின் இயக்குநருமான அனூப் சத்யன் இப்படத்தை இயக்குகிறார். கடந்த 2020-ம் ஆண்டு துல்கர் சல்மான், கல்யாணி பிரியதர்ஷன், சுரேஷ் கோபி மற்றும் ஷோபனா நடிப்பில் வெளியான ‘வரனே அவஷ்யமுண்டு’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அனூப் சத்யன், தற்போது தனது இரண்டாவது படத்திற்காக மோகன்லாலுடன் இணைந்துள்ளார்.

தற்காலிகமாக ‘எல் 368’ (L368) எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு தொடக்க விழா கொச்சியில் நடைபெற்றது. இதில் மோகன்லால், இயக்குநர் சத்யன் அந்திக்காடு, அனூப் சத்யன், மோகன்லாலின் மனைவி சுசித்ரா, தயாரிப்பாளர் ஆண்டனி பெரும்பாவூர் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஆசீர்வாத் சினிமாஸ் நிறுவனம் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் வழங்கும் இப்படத்தை பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் தயாரிக்கிறார்.

Mohanlal and Anoop Sathyan to team up in new film
Mohanlal and Anoop Sathyan to team up in new film

இப்படத்தில் நடிகர் மோகன்லாலுடன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிகர் முகேஷ் இணைந்து நடிக்கிறார். மேலும், அஜு வர்கீஸ், சங்கீத் பிரதாப், ராஜேஷ் மாதவன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மோகன்லால் இரண்டு சிறுமிகளுடன் அமர்ந்திருப்பது போன்ற வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. இதனால் இப்படத்தில் மோகன்லால் தந்தை கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். ஷெஹ்னாத் ஜலால் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் கதை, திரைக்கதை, இயக்கம் மற்றும் படத்தொகுப்பு பணிகளை அனூப் சத்யன் கவனிக்கிறார். கலை இயக்குநராக பிரசாந்த் மாதவ் பணியாற்றுகிறார். காமெடி, ஆக்ஷன் மற்றும் த்ரில்லர் அம்சங்களுடன் உணர்வுப்பூர்வமான கதைக்களத்தையும் இணைத்து இப்படம் உருவாகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் அனூப் சத்யன் தனது இரண்டாவது படத்தை இயக்குகிறார். அதுவும் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் முதல் முறையாக இணைந்திருப்பதால் ‘எல் 368’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

Leave a Comment