அருள்நிதியின் ‘வேட்ட சாமி’ படத்தின் முதல் பாடல் ‘சாமி அழைப்பு’ வெளியானது!

நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படம் ‘வேட்ட சாமி’. ‘பம்பர்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் எம். செல்வகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகரும் இயக்குநருமான அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், ஆடுகளம் நரேன், மதுசூதன் ராவ், ஹரீஷ் பேரடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘7 மைல்ஸ் பெர் செகண்ட்’ தயாரிப்பு நிறுவனம் சார்பில் சாமுவேல் மேத்யூ இப்படத்தைத் தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைக்க, ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தொகுப்புப் பணிகளை ரூபன் மேற்கொண்டுள்ளார். தென் தமிழகத்தின் கிராமிய மண்வாசனையுடன், காவல் தெய்வங்கள், பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஆன்மிகத்தை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.

Vetta Saami Movie First Single
Vetta Saami Movie First Single

படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இறுதிக்கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படம் வரும் டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘சாமி அழைப்பு’ பாடலின் லிரிக்கல் வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

இந்தப் பாடலைப் பிரபல வில்லுப்பாட்டுக் கலைஞர் மாதவி பாடியுள்ளார். மு. ஜெகன் கவிராஜ் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் மாதவி பின்னணிப் பாடகியாகத் திரையுலகில் அறிமுகமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிராமிய இசை மற்றும் தெய்வ வழிபாட்டின் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் பாடல், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அருள்நிதி – அமீர் கூட்டணி, கிராமியக் கதைக்களம் மற்றும் ஜிப்ரானின் இசை எனப் பல சிறப்பம்சங்களுடன் உருவாகியுள்ள ‘வேட்ட சாமி’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

Leave a Comment