ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ் நம்பர் 47 – திரைப்பட விமர்சனம் (Aadarsha Kutumbam House No: 47 Movie Review)
படக்குழு:
நடிகர்கள்: வெங்கடேஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, நிவேதா பெத்துராஜ், நாரா ரோஹித், வெண்ணிலா கிஷோர், ராவ் ரமேஷ்
இசை: தமன் S
ஒளிப்பதிவு: ரவி K, சந்திரன்
எடிட்டிங்: நவீன் நூலி
தயாரிப்பு: Haarika and Hassine Creations
இயக்கம்: திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ்.

கதைச் சுருக்கம்:
படத்தின் ஆரம்பத்திலேயே பீகாரைச் சேர்ந்த ஒரு கொடூரமான கொள்ளைக் கும்பல் அறிமுகப்படுத்தப்படுகிறது. பணக்காரர்களின் பெரிய பங்களா வீடுகளைக் குறிவைக்கும் இந்தக் கும்பல், முதலில் அந்த வீட்டில் டிரைவர், தோட்டக்காரர், சமையல்காரர் எனப் பல்வேறு வேடங்களில் வேலைக்குச் சேர்கிறது. சரியான சந்தர்ப்பம் கிடைத்ததும், வீட்டில் இருப்பவர்களைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் செல்கிறது. பல இடங்களில் இதேபோன்ற குற்றங்களைச் செய்துவரும் இந்தக் கும்பலைப் பிடிக்க முடியாமல் காவல்துறையும் திணறுகிறது. மறுபுறம், சராசரி குடும்பஸ்தனாக வரும் ஹீரோ வெங்கடேஷ், மனைவியாக ஸ்ரீநிதி ஷெட்டி இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள். கடனால் கஷ்டப்படும் ஹீரோவுக்கு திடீரென அவர் வாங்கிய லாட்டரியில் ரூ.100 கோடி ரூபாய் பரிசு விழ குடும்பமே கொண்டாட்டத்தில் இருக்கிறது. ஆனால் இந்த கொண்டாட்டம் நிலைத்ததா? இந்த அதிசய நிகழ்வு ஹீரோவின் குடும்பத்தை எந்த நிலைக்கு எடுத்து செல்கிறது? என்பதே முழுக் கதை.
FC விமர்சனம்:
இயக்குநர் திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இந்தப் படத்தை காமெடி கலந்த ஆக்ஷன் திரில்லராக உருவாக்க நினைத்திருக்கிறார், ஆனால் அது எப்படி வந்திருக்கிறது என்பதை பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை இப்ப்படத்தின் மிகப்பெரிய பலமாக வெங்கடேஷின் நடிப்பு அமைந்துள்ளது. சிட்டிபாபு கதாபாத்திரத்தில் தனது இயல்பான நகைச்சுவை பாணியால் ரசிகர்களைக் கவர்கிறார். குறிப்பாக, திரைக்கதையின் வேகம் சற்று குறையும் இடங்களிலும் தனது சிறப்பான நடிப்பால் காட்சிகளை சுவாரஸ்யமாக மாற்றுகிறார். ஸ்வர்ணா என்ற அப்பாவி மனைவி கதாபாத்திரத்தில் நடித்துள்ள நித்தி ஷெட்டி, தனது நடிப்பால் கவனம் ஈர்க்கிறார். அதுமட்டுமின்றி, கதையில் முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தும் சண்டைக் காட்சியிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

சிட்டிபாபுவின் குழந்தைகளாக நடித்துள்ள யுவினா மற்றும் பிரஜ்வல் இருவரும் இயல்பான நடிப்பை வழங்கியுள்ளனர். காவல்துறை அதிகாரியாக வரும் நாரா ரோஹித், தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக நடித்துள்ளார். நகைச்சுவை நடிகர் சத்யா சில காட்சிகளில் சிரிப்பை வரவழைத்தாலும், அவரது கதாபாத்திரத்திற்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம் என்ற எண்ணம் ஏற்படுகிறது. இதர கதாபாத்திரங்களில் நடித்துள்ள ரகு பாபு, பிரம்மாஜி, நிவேதா பெத்துராஜ் மற்றும் ராவ் ரமேஷ் ஆகியோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பைச் சிறப்பாக நிறைவேற்றியுள்ளனர். ஆனால் சில துணைக் கதாபாத்திரங்கள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என்ற உணர்வு ஏற்படுகிறது.
ரவி கே சந்திரனின் கலர்ஃபுல் ஒளிப்பதிவு கூடுதல் பலம், பிரம்மாண்டமான பங்களா காட்சிகள், விஷுவல் பிரேமிங் மற்றும் ஒட்டுமொத்த காட்சியமைப்பு மிகவும் அழகாக இருக்கின்றன. எடிட்டர் இரண்டாம் பாதியை கொஞ்சம் விறுவிறுப்பாக மாற்றியிருக்கலாம். தமனின் இசை படத்திற்கு எதிர்பார்த்த அளவிற்கு வலுசேர்க்கவில்லை. குறிப்பாக, பின்னணி இசை பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது. கதையின் உணர்வுகளுக்கு ஏற்ப ஆதரவளிக்க வேண்டிய இசை, சில இடங்களில் காட்சிகளின் ஓட்டத்திற்கு இடையூறாக அமைந்து பார்வையாளர்களின் கவனத்தைச் சிதறடிக்கிறது.
இயக்குநர் த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் முதல் பாதியை ரசிக்கும்படியான குடும்ப உணர்வுகள் மற்றும் நகைச்சுவைக் காட்சிகளுடன் சுவாரஸ்யமாகக் கொண்டு செல்கிறார். குடும்பப் பாசம், ஆக்ஷன் மற்றும் கிரைம் அம்சங்களைச் சரியான கலவையில் இணைத்து படத்திற்கு விறுவிறுப்பான தொடக்கத்தை வழங்கியுள்ளார். ஆனால், இரண்டாம் பாதியில் திரைக்கதையின் வேகம் குறைவதுடன், முதல் பாதியில் இருந்த சுவாரஸ்யமும் குறைகிறது. சில வலுவான காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பு இடம்பெற்றிருந்தால் படத்தின் ஒட்டுமொத்த தாக்கம் இன்னும் சிறப்பாக அமைந்திருக்கும்.
பலம்:
- கொள்ளைக் கும்பலின் பின்னணி
- சுவாரஸ்யமான கதாபாத்திர அறிமுகங்கள்
- லாட்டரி மூலம் பணக்காரராக மாறும் சம்பவம்
- சில காமெடிகள்
- முதல் பாதியில் விறுவிறுப்பான திரைக்கதை
- மாஸான இன்டர்வெல் பிளாக்.
பலவீனம்:
- லாஜிக் மீறல்கள்
- பலவீனமான இரண்டாம் பாதி
- உணர்வுப்பூர்வமான தொடர்பு குறைவு
- செயற்கைத்தனமான காட்சிகள்
- சில கதாபாத்திரங்கள் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை
- சில படங்களின் கலவையாக தோன்ற வைக்கும் காட்சிகள்
- பழக்கமான ஆக்ஷன் காட்சிகளின் தாக்கம்
குடும்பத்துடன் பார்க்கலாமா? – படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகமாக இடம்பெற்றுள்ளன. குறிப்பாகக் கொலை மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருப்பதால் வயது வரம்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இறுதியாக, ‘ஆதர்ஷ குடும்பம் ஹவுஸ் நம்பர்: 47’ சுமாரான மாஸ் என்டர்டெய்னர்!