ஜெயிலர் 2 – திரைப்பட விமர்சனம் (Jailer 2 Tamil Movie Review)
படக்குழு:
நடிகர்கள்: ரஜினிகாந்த், SJ சூர்யா, வித்யாபாலன், சூரஜ் வெஞ்சாரமூடு, ரம்யா கிருஷ்ணன், மிர்னா, மிதுன் சக்கரவர்த்தி
இசை: அனிருத்
ஒளிப்பதிவு: விஜய் கார்த்திக் கண்ணன்
எடிட்டிங்: R.நிர்மல்
தயாரிப்பு: சன் பிக்சர்ஸ்
இயக்கம்: நெல்சன்.

கதைச் சுருக்கம்:
முதல் பாகத்தில் வில்லனாக வரும் வர்மன் மரணத்திற்குப் பின்னால் இருப்பவர்கள் யார்? அவரிடம் இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள சிலைகள் அடங்கிய மூன்று கண்டெய்னர்களைக் கடத்தியது யார்? என்கிற கேள்விகளுடன் வில்லன் அணியும், தனது குடும்பத்தை காப்பாற்றவும், சிலைகளை கடத்தும் முக்கிய வில்லனை அழிக்கும் நோக்கில் ஹீரோ அணியும் ஒருவரையொருவர் தேடி செல்கின்றனர். அதற்குப் பிறகு நடக்கும் அதிரடியான சம்பவங்கள்தான் படத்தின் மீதிக்கதை.

FC விமர்சனம்:
ஜெயிலர் முதல் பாகத்தை காட்டிலும் இந்த படம் கூடுதல் சுவாரஸ்யமாகவும், கலகலப்பாகவும் செல்கிறது. நடிகர்களை பொறுத்தவரை ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்த் வழக்கம்போல் திரையை ஆள்கிறார். 75 வயதை நெருங்கும் நிலையிலும், ஹீரோவாகத் திரையில் தனது ஸ்டைல், வேகம், மாஸ் மற்றும் நடிப்பால் ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறார். இவருடன் நமோ நாராயணன் & யோகி பாபு இருவரும் வரும் காட்சிகள் அனைத்தும் தியேட்டரில் சிரிப்பு சத்தம் மட்டும்தான். அதிலும் நமோ நாராயணன் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளார், மூர்த்தி அண்ணனாக இவர் செய்யும் காரியங்கள் காமெடியின் உச்சம்.
வில்லன்களாக வரும் SJ சூர்யா, வித்யாபாலன், சூரஜ் வெஞ்சாரமூடு வழக்கமான தங்களது முத்திரைகளை பதித்துள்ளனர். இவர்களை தவிர சிறப்புத் தோற்றங்களாக முதல் பாகத்தில் வந்த அதே சிவராஜ்குமார், மோகன்லால் & ஜாக்கி ஷெராஃப் இந்த படத்திலும் வந்து செல்கின்றனர். மேலும் சில சர்ப்ரைஸ் கேமியோக்களும் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளன.
அனிருத்தின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களை கவர்ந்த நிலையில் பின்னணி இசையும் காட்சிகளின் விறுவிறுப்பையும் மாஸ் உணர்வையும் அதிகரிக்கிறது. ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணனின் விஷுவல்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. சிஜி காட்சிகளில் சில இடங்களில் மட்டும் சிறிய குறைகள் தெரிகின்றன.
ஜெயிலர் 2 படத்தை பொறுத்தவரை கதையில் பெரிய புதுமை இல்லாவிட்டாலும், திரைக்கதையின் வேகம் மற்றும் சுவாரஸ்யமான காட்சிகள் படத்தை ரசிக்க வைக்கின்றன. முதல் பாதி காமெடி காட்சிகள் நிறைந்து சுவாரஸ்யமாக செல்கிறது. ஆனால் இரண்டாம் பாதி கொஞ்சம் சொதப்பல்தான்… இருப்பினும் கிட்டத்தட்ட இரண்டே முக்கால் மணி நேரம் ஓடக்கூடிய படமாக இருந்தாலும், பெரிய அளவில் போரடிக்காமல் ரசிகர்களைக் கட்டிப்போடும் வகையில் திரைக்கதை அமைந்து படத்தை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றுள்ளார் இயக்குனர் நெல்சன்.

பலம்:
- ரஜினிகாந்தின் மாஸ் நடிப்பு.
- யோகி பாபு மற்றும் நமோ நாராயணனின் காமெடி.
- ரசிகர்களைக் கொண்டாட வைக்கும் ஆக்ஷன் காட்சிகள்.
- அனிருத்தின் இசை
- பிரிட்ஜ், டீக்கடை மற்றும் இன்டர்வெல் பிளாக் காட்சிகள்.
பலவீனம்:
- கதையில் பெரிய புதுமை இல்லை.
- சில காட்சிகளில் லாஜிக் முற்றிலும் இல்லை.
- மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் ஆகியோருக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.
- சில சிஜி காட்சிகள் முழுமையாகத் திருப்தி அளிக்கவில்லை.
- இரண்டாம் பாதி கூடுதல் சுவாரஸ்யத்தைக் கொடுத்திருக்கலாம்.
குடும்பத்துடன் பார்க்கலாமா? – என்னதான் ரஜினிகாந்த், காமெடி காட்சிகள் இருந்தாலும் ரத்தம் தெறிக்கும் ஆக்ஷன் காட்சிகள் நிறைய இருப்பதால் இப்படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது, எனவே வயது வரம்பைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இறுதியாக, ‘ஜெயிலர் 2’ பக்கா மாஸ் என்டர்டெய்னர்!