திரிஷ்யம் 3 – திரைப்பட விமர்சனம் (Drishyam 3 Movie Tamil Review)
படக்குழு:
நடிகர்கள்: அஜய் தேவ்கன், தபு, ஸ்ரேயா சரண், இஷிதா தத்தா, மிருணால் ஜாதவ்
இசை: ரவி பஸ்ரூர், ரோசக் கோஹ்லி, கர்மா, அமர் மொஹிலே
ஒளிப்பதிவு: சுதீர் குமார் சௌத்ரி
எடிட்டிங்: சந்தீப் பிரான்சிஸ்
தயாரிப்பு: பனோரமா ஸ்டுடியோஸ்
இயக்கம்: அபிஷேக் பதக்.
கதைச் சுருக்கம்:
முதல் இரண்டு பாகங்களில் வருண் (ஹிந்தி பதிப்பில் சமீர்) என்ற இளைஞனின் மரணத்திற்குப் பிறகு, அவனது பெற்றோர் தங்களது மகனின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜார்ஜ்குட்டி (ஹிந்தி பதிப்பில் விஜய்) மற்றும் அவரது குடும்பத்தினரைச் சட்டத்தின் முன் நிறுத்தப் பல முயற்சிகள் செய்கின்றனர். ஆனால், ஒவ்வொரு முறையும் விஜய் தனது குடும்பத்தைக் காப்பாற்றிவிடுகிறார். இந்நிலையில், மகனின் மரணத்திற்கு நீதி கிடைக்காத விரக்தியில் சமீரின் தாய் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார். இதனால் அதிர்ச்சியடையும் அவரது கணவர், இந்த முறை எப்படியாவது வழக்கை மீண்டும் திறந்து விஜய் மற்றும் அவரது குடும்பத்தினருக்குத் தண்டனை வாங்கிக் கொடுப்பதாக உறுதியளிக்கிறார். ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வழக்கு விசாரணை தொடங்குகிறது. இந்த முறை விஜய் தனது குடும்பத்தைக் காப்பாற்றினாரா? அல்லது சமீரின் பெற்றோருக்கு நீதி கிடைத்ததா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
FC விமர்சனம்:
2022-ல் வெளியான ஹிந்தி திரிஷ்யம் 2 திரைப்படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது. முதல் இரண்டு பாகங்களையும் இயக்கிய ஜீத்து ஜோசப்பின் கதைக்களத்தை அடிப்படையாகக் கொண்ட ஹிந்தி பதிப்பாக இல்லாமல், இந்த மூன்றாவது பாகத்திற்குப் புதிய கதையையும் திரைக்கதையையும் படக்குழுவினர் உருவாக்கியுள்ளனர். குறிப்பாக, மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் 3 திரைப்படத்தின் கதையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கதைக்களத்துடன் இந்த ஹிந்தி பதிப்பு உருவாகியிருப்பது கவனிக்க வேண்டிய விஷயம். அபிஷேக் பதக் இயக்கியுள்ள இப்படம், முதல் இரண்டு பாகங்களின் தொடர்ச்சியாக ஆறு மாதங்களுக்குப் பிறகு நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு நகர்கிறது.
நடிகர்களைப் பொறுத்தவரை, அஜய் தேவ்கன், ஜெய்தீப் அஹ்லாவத், பிரகாஷ் ராஜ் ஆகிய மூவரும் படத்தின் மிகப்பெரிய பலமாக இருக்கிறார்கள். குறிப்பாக, முதல் பாதி முழுவதும் ஜெய்தீப் அஹ்லாவத் தனது நடிப்பால் அதிகமாக ஸ்கோர் செய்கிறார். அவருடைய சிகரெட் காட்சி மற்றும் பெண் பார்க்கும் நிகழ்வின்போது இடம்பெறும் காட்சி எனச் சில இடங்களில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இரண்டாம் பாதியில் நீதிமன்றம் சார்ந்த காட்சிகள் மற்றும் விசாரணை தொடர்பான பகுதிகளில் பிரகாஷ் ராஜின் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளது. அதேபோல், அஜய் தேவ்கன் படம் முழுவதும் மிகக் குறைவாகவே பேசுகிறார். பல இடங்களில் மற்ற கதாபாத்திரங்கள் பேசும்போது தனது பார்வை மற்றும் முகபாவனைகளால் மட்டுமே பதிலளிக்கிறார். இருந்தாலும், ஒட்டுமொத்தப் படத்தையும் தனது நடிப்பால் தாங்கிச் செல்கிறார். ஸ்ரேயா சரண், தபு, ரஜத் கபூர் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை நேர்த்தியாகச் செய்துள்ளனர். இருப்பினும், முக்கியமான மூன்று நடிகர்களைப் போல இவர்களுக்குப் பெரிய அளவில் நடிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.
படத்தின் சில காட்சிகள் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஜெய்தீப் அஹ்லாவத்தின் சிகரெட் காட்சி, பெண் பார்க்கும் நிகழ்வில் இடம்பெறும் சம்பவம், இரண்டாம் பாதியில் வரும் டேப் ரெக்கார்டர் காட்சி ஆகியவை குறிப்பிடத்தக்கவை. முதல் இரண்டு பாகங்களிலும் இடம்பெற்ற ஒரு முக்கியமான காட்சியுடன் தொடர்புபடுத்தி மூன்றாவது பாகத்தில் அதற்கான முடிச்சைப் போட்டிருக்கும் விதம் சிறப்பாக அமைந்துள்ளது. கிளைமாக்ஸ் காட்சியும் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தொழில்நுட்ப ரீதியாக அமர் மொஹிலேவின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கிறது. குறிப்பாக, சில முக்கியமான காட்சிகளில் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற பதற்றத்தை உருவாக்கி, பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் இசை அமைந்துள்ளது.
ஆனால், படத்தின் முதல் பாதியில் சில குறைகள் இருக்கின்றன. இரண்டாம் பாதி தொடங்கியதும் திரைக்கதை வேகமாகவும் பரபரப்பாகவும் நகர்கிறது. ஆனால், முதல் பாதியில் சில காட்சிகள் நீளமாக அமைக்கப்பட்டுள்ளதால் படம் மெதுவாக நகர்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இன்னும் சற்று விறுவிறுப்பாகக் காட்சிகளை அமைத்திருக்கலாம். மேலும், சில இடங்களில் லாஜிக் தொடர்பான கேள்விகளும் எழுகின்றன. குறிப்பாக, நேரில் பார்த்திராத ஒரு நபரிடமிருந்து வரும் தகவலை நம்பி ஒரு குழுவினர் செயல்படுவது போன்ற காட்சி சற்றே நம்பகத்தன்மையைக் குறைக்கிறது. அந்தத் தகவல் எங்கிருந்து வந்தது, அதை அனுப்பியது யார் என்பதை காவல்துறை விசாரிக்கும் விதம் போன்ற அம்சங்களை இன்னும் விரிவாகக் காட்சிப்படுத்தியிருக்கலாம்.
இருப்பினும், ஒரு பொய்யைத் தொடர்ந்து பலமுறை கூறினால் அதுவே உண்மை என்று பலரும் நம்பத்தொடங்கிவிடுவார்கள் என்ற கருத்தை வசனத்தின் மூலம் அந்தக் காட்சியுடன் பொருத்தியிருப்பது ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளும்படி அமைந்துள்ளது. மொத்தத்தில், முதல் பாதியில் மெதுவாக நகர்ந்தாலும், இரண்டாம் பாதியில் அடுத்தடுத்து வரும் திருப்பங்களும், நடிகர்களின் சிறப்பான நடிப்பும் படத்தை விறுவிறுப்பான அனுபவமாக மாற்றுகின்றன.
பலம்:
- அஜய் தேவ்கனின் அற்புதமான நடிப்பு.
- ஜெய்தீப் அஹ்லாவத்தின் அட்டகாசமான முதல் பாதி நடிப்பு.
- பிரகாஷ் ராஜின் சிறப்பான நீதிமன்றக் காட்சிகள்.
- வலுவான திரைக்கதை மற்றும் திருப்பங்கள்.
- சிறப்பாக வடிவமைக்கப்பட்ட முக்கியமான காட்சிகள்.
- முதல் இரண்டு பாகங்களுடன் தொடர்புபடுத்தப்பட்ட காட்சிகள்.
- அமர் மொஹிலேவின் பின்னணி இசை.
- அட்டகாசமான கிளைமாக்ஸ்.
- குடும்பத்துடன் பார்க்கக்கூடிய கிரைம் திரில்லர்.
பலவீனம்:
- முதல் பாதியில் மெதுவாக நகரும் திரைக்கதை.
- சில காட்சிகள் தேவைக்கு அதிகமாக நீளமாக அமைந்திருப்பது.
- சில இடங்களில் லாஜிக் தொடர்பான கேள்விகள்.
- சில சம்பவங்கள் இன்னும் நம்பும்படியாகக் காட்சிப்படுத்தப்பட்டிருக்கலாம்.
குடும்பத்துடன் பார்க்கலாமா?
படத்தில் பாலியல் ரீதியான காட்சிகள் அல்லது அடல்ட் கன்டென்ட் பெரிதாக இல்லை. ஆங்காங்கே எலும்புக்கூடுகள் இடம்பெறும் காட்சிகள் இருப்பதால் UA 16+ வயது வரம்பு வழங்கப்பட்டுள்ளது. மற்றபடி, குடும்பத்துடன் தாராளமாகப் பார்க்கக்கூடிய கிரைம் திரில்லர் திரைப்படம்.
இறுதியாக, ‘திரிஷ்யம் 3’ – முதல் பாதியில் மெதுவான ஆட்டம்; இரண்டாம் பாதியில் அதிரடியான திருப்பங்கள்! அஜய் தேவ்கனின் நடிப்பில் வலுவான கிரைம் திரில்லர்!
Film Crazy Rating – 4 / 5