டாக்ஸிக் – திரைப்பட விமர்சனம் | யஷ், கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மிணி வசந்த்

டாக்ஸிக் – திரைப்பட விமர்சனம் (Toxic Movie Tamil Review)

படக்குழு:

நடிகர்கள்: யஷ், கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மிணி வசந்த், சுதேவ் நாயர்

இசை: ரவி பஸ்ரூர்

ஒளிப்பதிவு: ராஜீவ் ரவி

எடிட்டிங்: உஜ்வல் குல்கர்னி

தயாரிப்பு: KVN Productions, Monster Mind Creations

இயக்கம்: கீது மோகன்தாஸ்.

கதைச் சுருக்கம்:

மிகப்பெரிய கேங்ஸ்டராக வலம் வரும் கதாநாயகன், தனக்கு எதிராக வருபவர்களை இரக்கமின்றி அழிக்கும் அளவுக்கு அதிகாரமும் செல்வாக்கும் கொண்டவராக இருக்கிறார். ஒரு பக்கம் அவருக்கும் அவரது அக்காவுக்கும் இடையிலான பாசப் போராட்டம், இன்னொரு பக்கம் காதல் எனப் பல விஷயங்கள் கதையில் இடம்பெறுகின்றன. இவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கும் கமர்ஷியல் ஆக்ஷன் திரில்லர்தான் டாக்சிக்.

FC விமர்சனம்:

யஷ் மற்றும் கீது மோகன்தாஸ் இணைந்து எழுதிய கதையை கீது மோகன்தாஸ் இயக்கியிருக்கிறார். படத்தில் எதிர்பாராத கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. ஆனால், அந்த ட்விஸ்ட் ரசிகர்களை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பது படத்தைப் பார்க்கும்போதுதான் தெரியும். இந்தப் படத்தின் மிகப்பெரிய பலம் யஷ்தான். இரண்டு கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் அவர், இரண்டுக்கும் தேவையான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக, அவரது திரை இருப்பும், ஆக்ஷன் காட்சிகளும் கவனிக்க வைக்கின்றன. இருப்பினும், கிளைமாக்ஸை நோக்கிச் செல்லும்போது சில இடங்களில் கொஞ்சம் ஓவராக நடித்துவிட்டாரோ என்ற உணர்வும் ஏற்படுகிறது.

யஷ் தவிர கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மிணி வசந்த் ஆகிய மூன்று நடிகைகளும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். மூவருமே தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். சுதேவ் நாயர் யஷ் கதாபாத்திரத்துடன் பயணிக்கும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வந்து செல்கிறார். மற்ற துணை நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

மேக்கிங்கைப் பொறுத்தவரை படம் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் இந்தப் படத்தில், ஒவ்வொரு காட்சியிலும் தயாரிப்புச் செலவு தெரிகிறது. பிரம்மாண்டமான செட்கள், காட்சிகளின் வடிவமைப்பு எனப் பல இடங்களில் படத்தின் மேக்கிங் பிரம்மாண்டமாக இருக்கிறது. இதற்குப் பெரிய பக்கபலமாக அமைந்திருப்பது ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு, புரொடக்ஷன் டிசைன் மற்றும் சவுண்ட் டிசைனிங் குழுவின் பங்களிப்புதான். அதேபோல், டி.ஐ. மற்றும் கலர் கிரேடிங் பணிகளும் பல இடங்களில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளன. தொழில்நுட்ப ரீதியாகப் படக்குழு அதிக உழைப்பைக் கொடுத்திருப்பது திரையில் தெரிகிறது.

ஆனால், இந்தப் பிரம்மாண்டமான மேக்கிங்கைத் தாண்டி படத்தில் சொல்லிக்கொள்ளும்படியான விஷயங்கள் மிகவும் குறைவு என்பதுதான் வருத்தம். படத்தின் மிகப்பெரிய பலவீனம் திரைக்கதைதான். இயக்குநர் நினைத்ததை எல்லாம் திரையில் கொண்டுவர முயற்சி செய்திருக்கிறார். ஆனால், அவை அனைத்தும் சுவாரஸ்யமான காட்சிகளாக மாறவில்லை. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்போ, பதற்றமோ எங்குமே உருவாகவில்லை. முதல் பாதியிலேயே பல இடங்களில் காட்சிகள் ஒன்றோடொன்று எப்படித் தொடர்புபடுகின்றன என்பது புரியாமல் குழப்பமாக இருக்கிறது. திரைக்கதை மிகவும் தட்டையாகவும், உணர்வுப்பூர்வமான தொடர்பு இல்லாமலும் நகர்கிறது.

இரண்டாம் பாதி இன்னும் மோசம். முதல் பாதியே பரவாயில்லை என்று சொல்லும் அளவுக்கு இரண்டாம் பாதி அமைந்திருக்கிறது. கடைசியில் ஒரு ட்விஸ்ட்டைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால், அதைப் பார்த்ததும் ‘இதுதான் ட்விஸ்ட்டா?’ என்ற உணர்வுதான் ஏற்படுகிறது. அந்த அளவுக்கு சுவாரஸ்யமற்ற எழுத்தாக இருக்கிறது. மேலும், படத்தில் எந்தக் கதாபாத்திரமும் அழுத்தமாக எழுதப்படவில்லை. யஷ் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டால், அவர் திரையில் தோன்றும்போதெல்லாம் கையில் சிகரெட், மதுபாட்டில், கத்தி, கோடாரி அல்லது துப்பாக்கி என ஏதாவது ஒன்றை வைத்துக்கொண்டிருக்கிறார். அவை எதுவும் இல்லையென்றால் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதுபோலவே அவரது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. ‘நான் ஹீரோ கிடையாது, கெட்டவன்தான்’ என்று அவரே சொல்லிக்கொள்ளும் அளவுக்குத்தான் அந்தக் கதாபாத்திரத்தின் எழுத்து இருக்கிறது.

யஷ் மற்றும் கியாரா அத்வானி இடையிலான உறவும்கூட ஆழமாகப் பதிவு செய்யப்படவில்லை. அதேபோல், ருக்மிணி வசந்தின் கதாபாத்திரம் யஷின் வாழ்க்கைக்குள் எதற்காக வருகிறது, கதையில் அதன் முக்கியத்துவம் என்ன என்பதற்கான தெளிவான விளக்கமும் இல்லை. இன்னொரு பிரச்சனை படத்தில் வலுவான வில்லன் கதாபாத்திரம் இல்லாததுதான். ஹீரோவுக்கு எதிராக நிற்கக்கூடிய ஒரு வில்லன் கதாபாத்திரத்தைக்கூட அழுத்தமாக உருவாக்கவில்லை. இறுதியில் ஹீரோவுக்கே அவர்தான் வில்லன் என்ற வகையில் கதை நகர்கிறது. இதனால் கதாபாத்திரங்களுடன் நம்மால் உணர்வுப்பூர்வமாக இணைய முடியவில்லை.

படத்தில் வரும் பல கதாபாத்திரங்களும் பார்ப்பனிய மனப்பான்மை கொண்டவர்களாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதால், அவர்களுடைய வாழ்க்கையுடனோ கதையுடனோ நமக்கு எந்தவிதமான உணர்வுப்பூர்வமான தொடர்பும் ஏற்படவில்லை. இசையைப் பொறுத்தவரை, ‘கே.ஜி.எஃப்’ படத்தில் அதிரடியான பின்னணி இசையைக் கொடுத்த ரவி பஸ்ரூரின் பங்களிப்பு இங்கே பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. படம் முழுவதும் ஒரே இரைச்சலாகவே பின்னணி இசை ஒலிக்கிறது. கதையை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தும் வகையில் இசை அமையவில்லை.

தமிழ் டப்பிங் வசனங்களும் மிகப்பெரிய பலவீனம். பல இடங்களில் வசனங்கள் மிகவும் தரமற்றதாகவும், ஆபாசமான குறிப்புகளுடனும் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக, சில வசனங்கள் திரையரங்கில் அமர்ந்திருக்கும் ரசிகர்களுக்கே சங்கடத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன. இந்தப் படத்தின் வசன எழுத்து இன்னும் கவனமாகச் செய்யப்பட்டிருக்கலாம். இதையெல்லாம் தாண்டி படத்தின் நீளமும் மிகப்பெரிய சோதனை. சுமார் 3 மணி நேரம் 14 நிமிடங்கள் ஓடும் இந்தப் படத்தின் முதல் பாதியே கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் நீள்கிறது. ஒரு முழுப் படத்தைப் பார்த்துவிடும் அளவுக்கு முதல் பாதியைப் பார்ப்பதற்கே நேரம் எடுத்துக்கொள்வது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதிலும், நம்மைத் திரையுடன் கட்டிப்போடும் சுவாரஸ்யமான காட்சிகள் இல்லாததால், படம் எப்போது முடியும் என்ற எண்ணமே அதிகமாகிறது.

மொத்தத்தில், பிரம்மாண்டமான மேக்கிங் இருந்தும் வலுவான திரைக்கதை, அழுத்தமான கதாபாத்திரங்கள், சுவாரஸ்யமான காட்சிகள் மற்றும் உணர்வுப்பூர்வமான தொடர்பு என எதுவுமே சரியாக அமையாத படம்.

பலம்:

  • யஷின் திரை இருப்பு மற்றும் நடிப்பு.
  • பிரம்மாண்டமான மேக்கிங்.
  • ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு.
  • புரொடக்ஷன் டிசைன்.
  • சவுண்ட் டிசைனிங் மற்றும் தொழில்நுட்பப் பணிகள்.
  • கியாரா அத்வானி, நயன்தாரா, ருக்மிணி வசந்தின் நடிப்பு.

பலவீனம்:

  • மிகவும் பலவீனமான திரைக்கதை.
  • சுவாரஸ்யமற்ற முதல் மற்றும் இரண்டாம் பாதி.
  • அழுத்தமாக எழுதப்படாத கதாபாத்திரங்கள்.
  • வலுவான வில்லன் கதாபாத்திரம் இல்லாதது.
  • உணர்வுப்பூர்வமான தொடர்பு இல்லாத கதை.
  • பின்னணி இசையில் அதிகமான இரைச்சல்.
  • தரமற்ற தமிழ் டப்பிங் வசனங்கள்.
  • 3 மணி நேரம் 14 நிமிடங்கள் என்ற அதிகப்படியான படத்தின் நீளம்.

குடும்பத்துடன் பார்க்கலாமா?

படத்தில் ஏராளமான வன்முறைக் காட்சிகள், ரத்தம் தெறிக்கும் காட்சிகள், துப்பாக்கிச் சூடு மற்றும் ஆபாசமான வசனங்கள் இடம்பெற்றுள்ளன. கடுமையான வன்முறை மற்றும் வயது வந்தோருக்கான உள்ளடக்கம் காரணமாகப் படம் A சான்றிதழ் பெற்றுள்ளது. குடும்பத்துடன் பார்ப்பதற்கு ஏற்ற படம் அல்ல.

இறுதியாக, ‘டாக்சிக்’ – பெயருக்கு ஏற்றபடி ரசிகர்களின் பொறுமையைச் சோதிக்கும், பிரம்மாண்டமான மேக்கிங் மட்டுமே மிஞ்சும் ஒரு பிலோ ஆவரேஜ் திரைப்படம்!

Film Crazy Rating – 1.5 / 5

Leave a Comment