தூமகேது – திரைப்பட விமர்சனம் | சஜின் கோபு, நிகிலா விமல்

தூமகேது – திரைப்பட விமர்சனம் (Dhoomakethu Movie Tamil Review)

படக்குழு:

நடிகர்கள்: சஜின் கோபு, நிகிலா விமல், கணபதி எஸ், ஷைன் டாம் சாக்கோ, சித்தார்த் பரதன்

இசை: அங்கித் மேனன்

ஒளிப்பதிவு: ஜிண்டோ ஜார்ஜ்

எடிட்டிங்: விவேக் ஹர்ஷன்

தயாரிப்பு: Happy Hours Entertainments, A & HS Production House

இயக்கம்: சுதி மேடிசன்.

கதைச் சுருக்கம்:

35 வயதைக் கடந்தும் திருமணமாகாமல் இருக்கும் குட்டன் (சஜின் கோபு), ஒருவழியாகத் தனக்குப் பொருத்தமான பெண்ணைக் கண்டுபிடித்து திருமணத்திற்குத் தயாராகிறார். திருமணத்திற்கு முந்தைய நாளில் மிகுந்த சந்தோஷத்துடன் இருக்கும் அவருக்கு, ஊரில் உள்ளவர்கள் பலரும் இந்தத் திருமணம் குறித்து கேலி பேசுகிறார்கள். அழகான பெண்ணுக்கு இவரைப் போன்ற ஒருவரா மாப்பிள்ளை கிடைத்திருக்கிறார் என்று சந்தேகமும் எழுப்புகிறார்கள். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் திருமண மேடைக்குச் செல்லும் குட்டனுக்கு அங்கே எதிர்பாராத அதிர்ச்சி காத்திருக்கிறது. திருமணத்திற்கு வந்த பெரியவர் ஒருவர் திடீரென மயங்கி விழ, திருமணம் தடைபடுகிறது.

ஒருவழியாக நண்பனின் உதவியுடன் திருமணத்தை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்லும் குட்டன், அடுத்ததாக ஒரு மர்ம நபரால் கொலை செய்யப்படுவது போன்ற கனவு காண்கிறார். ஆனால் காலையில் எழுந்ததும் மீண்டும் அதே நாள் தொடங்குகிறது. கனவில் நடந்த சம்பவங்கள் அனைத்தும் நிஜத்திலும் அப்படியே நடக்கின்றன. அதுமட்டுமல்லாமல், திருமணத்திற்குப் பிறகு அவரைக் கொலை செய்ய வரும் முகமூடி அணிந்த மர்ம நபரும் மீண்டும் மீண்டும் தோன்றுகிறார். இது ஏன் நடக்கிறது? ஒரே நாளைத் திரும்பத் திரும்ப வாழ்வதற்கான காரணம் என்ன? தன்னைக் கொலை செய்ய முயற்சிப்பவர் யார்? என்பதைக் கண்டுபிடிக்கக் கதாநாயகன் முயற்சிப்பதே படத்தின் மீதிக்கதை.

FC விமர்சனம்:

நடிகர்களை பொறுத்தவரை, நாயகன் சஜின் கோபு இப்படத்தின் பெரிய பலம். குறிப்பாக காமெடி காட்சிகளில் அவருடைய நடிப்பு மிகவும் இயல்பாக இருக்கிறது. டைம் லூப் கதைகளில் ஒரே சம்பவம் மீண்டும் மீண்டும் நடக்கும்போது, ஒவ்வொரு முறையும் கதாநாயகனின் எதிர்வினை மாறிக்கொண்டே இருக்க வேண்டும். அந்த வித்தியாசத்தை தனது முகபாவனைகள், உடல்மொழி மற்றும் காமெடி டைமிங் மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, ஏற்கனவே நடக்கப்போகும் சம்பவம் தெரிந்திருப்பதால் அதைச் சாதாரணமாகக் கடந்து செல்லும் காட்சிகளில் அவருடைய நடிப்பு ரசிக்க வைக்கிறது. நாயகி நிகிலா விமல், கணபதி, ஷைன் டாம் சாக்கோ உள்ளிட்ட நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் நடித்துள்ளனர்.

இசையமைப்பாளர் அங்கித் மேனனின் பின்னணி இசை படத்தின் காமெடி மற்றும் டைம் லூப் காட்சிகளுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது. பெரிய அளவில் தனித்துவமான இசை அனுபவத்தைத் தராவிட்டாலும், படத்தின் திரைக்கதைக்கு நல்ல ஆதரவாக இருக்கிறது. படத்தின் தொழில்நுட்பப் பணிகள் கதைக்குத் தேவையான அளவில் சிறப்பாக அமைந்துள்ளன. இயக்குநர் சுதி மாடிசன், வழக்கமான மலையாளக் காமெடி பாணியுடன் டைம் லூப் கதைக்களத்தையும் இணைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார்.

குறிப்பாக, ஒரே நாளைத் திரும்பத் திரும்ப அனுபவிக்கும் கதாநாயகனின் சூழ்நிலையை வைத்து உருவாக்கப்பட்ட காமெடி காட்சிகள் முதல் பாதியில் சிறப்பாக அமைந்துள்ளன. ஒவ்வொரு முறையும் ஒரே சம்பவம் நடக்கப்போகிறது என்பது கதாநாயகனுக்குத் தெரிந்துவிடுவதால், அதை அவர் இயல்பாக எதிர்கொள்ளும் விதம் பல இடங்களில் சிரிப்பை ஏற்படுத்துகிறது. இருப்பினும், இரண்டாம் பாதியில் கதை சமூகத்தின் பார்வை, மனிதர்களின் வெளிப்புறத் தோற்றத்தை வைத்து அவர்களை மதிப்பிடுவது போன்ற விஷயங்களைப் பேசத் தொடங்குகிறது. இந்தப் பகுதிகளில் சில காட்சிகள் ஏற்கனவே பார்த்த உணர்வை ஏற்படுத்துகின்றன. அதனால் முதல் பாதியில் இருந்த அளவுக்கு இரண்டாம் பாதி முழுமையான திருப்தியைத் தரவில்லை.

பலம்:

  • சஜின் கோபுவின் அட்டகாசமான காமெடி நடிப்பு.
  • வித்தியாசமான டைம் லூப் கதைக்களம்.
  • முதல் பாதியில் இடம்பெறும் சுவாரஸ்யமான காமெடி காட்சிகள்.
  • விவேக் ஹர்ஷனின் நேர்த்தியான எடிட்டிங்.
  • அங்கித் மேனனின் பின்னணி இசை.
  • சமூகத்தின் வெளிப்புறத் தோற்றம் சார்ந்த பார்வையைப் பேசும் கருத்து.

பலவீனம்:

  • இரண்டாம் பாதியில் சில காட்சிகள் வழக்கமான பாணியில் அமைந்துள்ளன.
  • முதல் பாதியில் இருந்த காமெடி மற்றும் சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் குறைகிறது.
  • டைம் லூப் உருவானதற்கான காரணம் முழுமையாக விளக்கப்படவில்லை.
  • சில கதாபாத்திரங்கள் இன்னும் சிறப்பாக எழுதப்பட்டிருக்கலாம்.
  • இரண்டாம் பாதியின் திரைக்கதையில் கூடுதல் சுவாரஸ்யம் இருந்திருக்கலாம்.

குடும்பத்துடன் பார்க்கலாமா? – பெரிய அளவிலான ஆபாசக் காட்சிகள் இல்லாத ஒரு பொழுதுபோக்கு திரைப்படத்தைப் பார்க்க விரும்புபவர்கள் குடும்பத்துடன் ரசிக்கக்கூடிய படமாக இது அமையும்.

இறுதியாக, ‘தூமகேது‘ ஒரு ஜாலியான டைம் லூப் காமெடி திரைப்படம்!

Film Crazy Rating – 3 /5

Leave a Comment