மூக்குத்தி அம்மன் 2 – திரைப்பட விமர்சனம் | நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, துனியா விஜய்

மூக்குத்தி அம்மன் 2 – திரைப்பட விமர்சனம் (Mookuthi Amman 2 Movie Review)

படக்குழு:

நடிகர்கள்: நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, துனியா விஜய், ஊர்வசி, யோகி பாபு, சினேகா, குஷ்பு சுந்தர்

இசை: ஹிப் ஹாப் தமிழா

ஒளிப்பதிவு: கோபி அமர்நாத், கோபிநாத் வேணுகோபால்

எடிட்டிங்: ஃபென்னி ஆலிவர்

தயாரிப்பு: வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல், அவ்னி சினிமேக்ஸ், ரௌடி பிக்சர்ஸ்

இயக்கம்: சுந்தர்.சி.

கதைச் சுருக்கம்:

காவல்துறை கான்ஸ்டபிளாக வரும் நாயகி நயன்தாரா, அவருக்கு அடிக்கடி ஒரு குறிப்பிட்ட ஊர் கனவில் தோன்றுகிறது. அந்த ஊருக்கும் தனக்கும் என்ன தொடர்பு, ஏன் அந்த ஊர் மீண்டும் மீண்டும் கனவில் வருகிறது என்பது அவருக்குப் புரியவில்லை. ஒரு கட்டத்தில் அந்த ஊருக்கே தன்னார்வமாகப் பணியிட மாற்றம் பெற்றுச் செல்கிறார். அங்கு சென்ற பிறகு, அவர் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்களும், அவற்றின் பின்னணியில் இருக்கும் மர்மங்களும்தான் படத்தின் முழுக்கதை.

FC விமர்சனம்:

மூக்குத்தி அம்மன் 2, முதல் பாகத்திற்கும் இந்தப் படத்திற்கும் கதையளவில் எந்தத் தொடர்பும் இல்லை. முற்றிலும் புதிய கதைக்களத்துடன் ஃபேண்டஸி ஆக்‌ஷன் திரில்லர் பாணியில் உருவாகியிருக்கிறது. ஒரு பக்கம் சாதாரண காவல்துறை கான்ஸ்டபிளாகவும், மறுபக்கம் மகாசக்தியாகவும் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் அசத்தியுள்ளார் நயன்தாரா. குறிப்பாக இரண்டாம் பாதியில் மூக்குத்தி அம்மனாக இவர் வரும் காட்சிகள் ரசிக்கும்படி இருந்தது. வில்லியாக வரும் ரெஜினா கசாண்ட்ரா தனது பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியுள்ளார். முக்கிய பாத்திரத்தில் வரும் துனியா விஜய் சிறப்பாக நடித்திருந்தாலும், வேறு பிரபலமான நடிகர் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். யோகிபாபு இருந்தாலும் அவருக்குப் பெரிய அளவில் நகைச்சுவைக்கான வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவர்களைத்தவிர துணை நடிகர்களாக வரும் ஊர்வசி, சுனில், யோகிபாபு, சிங்கம்புலி, இனியா ஆகியோர் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட திரை நேரத்திற்குள் கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர்.

ஹிப் ஹாப் ஆதி-யின் இசை படத்திற்கு பெரிய பலம். சில இடங்களில் இரைச்சலாக தெரிந்தாலும் காட்சிகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது. படத்தின் காட்சிகளைப் பார்வையாளர்களுக்கு ஈர்க்கும் வகையில் காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத், கதைக்குத் தேவையான விஷுவல் அம்சங்களைச் சிறப்பாகக் கொண்டு வந்திருப்பது படத்திற்குச் சாதகமாக அமைந்துள்ளது.

ஃபேண்டஸி ஆக்‌ஷன் திரில்லர் என்றாலும் நாம் பார்த்து சலித்த நல்ல சக்தி – தீய சக்தி மோதல் என்ற பழக்கமான கதைக்களமே இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கதை புதிதாக இல்லாததால், திரைக்கதையிலாவது வித்தியாசமான அணுகுமுறையைக் கொடுத்திருக்கலாம். ஆனால், பல காட்சிகள் ஏற்கெனவே பார்த்த உணர்வையே ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, சுந்தர்.சி படங்களில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்க்கும் நகைச்சுவை அம்சம் இந்தப் படத்தில் பெரிதாக இல்லை. படம் தொடக்கத்திலிருந்து பெரும்பாலும் சீரியஸான மனநிலையிலேயே நகர்கிறது.

இரண்டாம் பாதியில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்தைச் சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன. இத்தகைய காட்சிகளுக்கு வலுவான தொழில்நுட்பப் பங்களிப்பு அவசியம். ஆனால், சில இடங்களில் சிஜி மற்றும் விஎஃப்எக்ஸ் காட்சிகள் தரம் குறைந்து காணப்படுகின்றன. இன்னும் சிறப்பாகச் செய்திருக்க வேண்டிய தொழில்நுட்ப அம்சங்கள் படத்தின் மீதான ஈர்ப்பைக் குறைக்கின்றன. திரைக்கதை சுவாரஸ்யமாக இல்லாததால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை எளிதாகவே கணிக்க முடிகிறது. அதேபோல், எமோஷனல் கனெக்ட் ஆகாதது படத்திற்கு மைனஸாக அமைகிறது.

பலம்:

  • நயன்தாரா-வின் கதாப்பாத்திரம் நடிப்பு.
  • ரெஜினா கசாண்ட்ரா மற்றும் துனியா விஜய்யின் பங்களிப்பு.
  • அம்மன் கதாப்பாத்திரம் வரும் காட்சிகள்
  • கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு.
  • ஹிப் ஹாப் ஆதியின் அம்மன் பாடல் & பின்னணி இசை

பலவீனம்:

  • ஏற்கெனவே பார்த்து சலித்த கதைக்களம்.
  • புதுமை குறைந்த திரைக்கதை.
  • கதையுடன் பொருந்தாத நகைச்சுவைப் பகுதி.
  • CGI & VFX குறைகள்.

குடும்பத்துடன் பார்க்கலாமா? – இப்படத்தில் பாலியல் ரீதியான காட்சிகள் பெரிதாக இல்லை. இருப்பினும், ரத்தம் தெறிக்கும் வகையிலான வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனவே, குழந்தைகளுடன் படம் பார்க்கச் செல்லும் பெற்றோர்கள் இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இறுதியாக, ‘மூக்குத்தி அம்மன் 2‘ ஆவ்ரேஜ் ஃபேண்டஸி ஆக்‌ஷன் திரில்லர்

Film Crazy Rating – 2.75 /5

Leave a Comment