ஜான் டோ – திரைப்பட விமர்சனம் | அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன்

ஜான் டோ – திரைப்பட விமர்சனம் (John Doe Movie Review)

படக்குழு:

நடிகர்கள்: அர்ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், ஸ்ரிஷ்டி சிங், ஜாரா வினீத் சந்தோக், அனுபமா குமார்

இசை: முஜீப் மஜீத்

ஒளிப்பதிவு: ப்ரீத்தா ஜெயராமன்

எடிட்டிங்: விஜய் வெங்கடரமணன்

தயாரிப்பு: Archa Media Works

இயக்கம்: மதுமிதா.

கதைச் சுருக்கம்:

காவல்துறை அதிகாரியாக வரும் நாயகன் அர்ஜுன் தாஸ், படத்தின் தொடக்கத்தில், எல்லைப் பகுதியில் அவர் பணியில் ஈடுபட்டிருந்தபோது கண்ணிமைக்கும் நேரத்தில் கார் ஒன்று அருகிலுள்ள ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. உடனடியாகச் சம்பவ இடத்திற்குச் செல்லும் கதாநாயகன், வாகனத்திற்குள் ஒரு சிறுவனின் சடலம் இருப்பதைக் கண்டுபிடிக்கிறார். இதன்பிறகு அந்தச் சம்பவத்தின் பின்னணியைக் கண்டுபிடிக்க அவரே விசாரணையில் இறங்குகிறார். அந்த விசாரணையில் வெளிவரும் உண்மைகளும், அடுத்தடுத்த சம்பவங்களும்தான் படத்தின் மீதிக்கதை.

FC விமர்சனம்:

‘கேடி என்கிற கருப்புதுரை’ படத்தை இயக்கிய மதுமிதா, இந்தப் படத்தை கிரைம் திரில்லர் பாணியில் உருவாக்கியுள்ளார். இப்படத்தின் நடிகர்களை பொறுத்தவரை, நாயகன் அர்ஜுன் தாஸ் காவல்துறை அதிகாரியாக நன்றாக நடித்துள்ளார். அவருடைய நடிப்பும் கதாபாத்திர வடிவமைப்பும் படத்தின் பலமாக இருக்கின்றன. நேர்மையான, அதேசமயம் சற்று முரட்டுத்தனமான பெண் காவல்துறை அதிகாரியாக வரும் சஞ்சனா நடராஜன் கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை வழங்கியுள்ளார். முக்கியமான துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள சிருஷ்டி, ஜாரா உள்ளிட்ட அனைவரும் தங்களுடைய பங்களிப்பை குறையில்லாமல் வழங்கியுள்ளனர்.

கிரைம் திரில்லர் கதைக்களத்திற்குத் தேவையான சூழலையும் மனநிலையையும் ஒளிப்பதிவு சிறப்பாக உருவாக்குகிறது. கதையின் மர்மத் தன்மைக்கு ஏற்ற வகையில் காட்சிகள் அமைந்துள்ளன. பின்னணி இசை சில முக்கியமான காட்சிகளுக்குத் தேவையான ஆதரவை வழங்குகிறது. குறிப்பிட்ட சில காட்சிகளில் இசை நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. படத்தின் கதைக்களத்தையும் கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்துவதற்கு ஆரம்பத்தில் சற்று நேரம் எடுத்துக்கொண்டாலும், அதன் பிறகு திரைக்கதை விறுவிறுப்பாக நகர்கிறது. குறிப்பாக, முதல் பாதியின் இறுதியில் வரும் திருப்பம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கிறது. இடைவேளையில் நல்லதொரு சுவாரஸ்யமான கட்டத்தில் படத்தை நிறுத்தியிருப்பது சிறப்பு. ஆனால், இரண்டாம் பாதியில் சில காட்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு நேர்த்தியாக அமையவில்லை. சில இடங்களில் சினிமாத்தனமான காட்சிகளும், தேவையற்ற காதல் பகுதியும் கதையின் வேகத்தைக் குறைக்கின்றன.

பலம்:

  • வித்தியாசமான கிரைம் திரில்லர் கதைக்களம்.
  • அர்ஜுன் தாஸ் & சஞ்சனா நடராஜனின் நடிப்பு.
  • முதல் பாதியில் விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை.
  • இடைவேளையில் இடம்பெறும் திருப்பம்.
  • கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவு.
  • சில முக்கியமான காட்சிகளில் சிறப்பாகச் செயல்படும் பின்னணி இசை.

பலவீனம்:

  • இரண்டாம் பாதியில் சில காட்சிகள் செயற்கையாகத் தோன்றுகின்றன.
  • கதையின் வேகத்திற்குத் தேவையில்லாத காதல் பகுதி.
  • சஞ்சனா நடராஜனின் கதாபாத்திரத்திற்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.
  • சில காட்சிகளில் காவல்துறையின் செயல்பாடுகள் நம்பகத்தன்மையைக் குறைக்கின்றன.

குடும்பத்துடன் பார்க்கலாமா? – படத்தில் சில உணர்வுபூர்வமான மற்றும் சென்சிட்டிவான விஷயங்கள் கையாளப்பட்டுள்ளன. அதிகப்படியான வெளிப்படையான காட்சிகள் இல்லாவிட்டாலும், கதையின் உள்ளடக்கத்தைக் கொண்டு UA 16+ வயது வரம்பிற்கு ஏற்ற படமாகக் கருதலாம்.

இறுதியாக, ‘ஜான் டோ‘ டீசன்ட் கிரைம் திரில்லர்

Film Crazy Rating – 3 /5

Leave a Comment