கோந்தல் – திரைப்பட விமர்சனம் | கிஷோர் கடம், இஷிதா தேஷ்முக்

கோந்தல் – திரைப்பட விமர்சனம் (Gondhal Movie Review)

படக்குழு:

நடிகர்கள்: கிஷோர் கடம், இஷிதா தேஷ்முக், யோகேஷ் சோஹோனி, நிஷாத் போயர், அனுஜ் பிரபு

இசை: இளையராஜா

ஒளிப்பதிவு: அமலேந்து சௌத்ரி

எடிட்டிங்: ஆஷிஷ் மத்ரே

தயாரிப்பு: தாவகார் ஃபிலிம்ஸ்

இயக்கம்: சந்தோஷ் தாவகார்.

கதைச் சுருக்கம்:

ஒரு கிராமத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது. அனந்தா என்பவருக்கும் சுமன் என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிகிறது. திருமணத்திற்குப் பிறகு அந்தக் கிராமத்தின் வழக்கப்படி இரவில் ‘கோந்தல்’ என்ற பாரம்பரிய நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இது நமது ஊர் தெருக்கூத்து போன்ற ஒரு நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. சுமன் மீது அந்தக் கிராமத்தில் பலருக்கும் விருப்பம் இருந்ததால், அனந்தாவைத் திருமணம் செய்துகொண்டதைப் பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே கிராமத்தில் ஊர்த் தலைவர் மற்றும் அவரது மகன் என இரண்டு செல்வாக்கு மிக்க கதாபாத்திரங்கள் இருக்கின்றனர். அவர்களைக் கண்டாலே ஊர் மக்கள் அச்சப்படுகின்றனர். குறிப்பாக, தலைவரின் மகனுக்கும் சுமன் மீது ஒரு கண் இருக்கிறது. இப்படிக் கதாபாத்திரங்களும் பின்னணியும் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அந்த இரவில் நடைபெறும் சம்பவங்கள் கிராமத்தின் அடுத்த நாள் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகின்றன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

FC விமர்சனம்:

2025-ல் மராத்தி மொழியில் வெளியான ‘கோந்தல்’, தற்போது தமிழ் டப்பிங் வடிவில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. பல திரைப்பட விருதுகளைப் பெற்றதுடன், 99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான இந்தியாவின் சிறந்த சர்வதேசத் திரைப்படப் பிரிவுக்கான தேர்விலும் இப்படம் இடம்பெற்றுள்ளது. இப்படத்தின் விமர்சனத்தை பார்ப்போம், நடிகர்களை பொறுத்தவரை இப்படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாயகி இஷிதா தேஷ்முக், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, 25 நிமிடத் தொடர்ச்சியான காட்சியில் பலவிதமான உணர்ச்சிகளையும் முகபாவனைகளையும் மாற்றி வெளிப்படுத்தியிருக்கும் விதம் சிறப்பாக உள்ளது. திருமண மாப்பிள்ளையாக வரும் யோகேஷ் சோஹோனி தனது கதாபாத்திரத்திற்குத் தேவையான நடிப்பை நேர்த்தியாக வழங்கியுள்ளார். மேலும் ஊர்த் தலைவரின் மகனாக வரும் நிஷாத் போயர் உள்ளிட்ட மற்ற நடிகர்களும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சிறப்பாகக் கையாண்டுள்ளனர். குறிப்பாக, நாடகப் பின்னணி கொண்ட நடிகர்களின் பங்களிப்பு படத்தின் தொடர்ச்சியான காட்சிகளுக்கு வலு சேர்த்துள்ளது.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மனதை கவரும் மெலோடி பாடல் முதல், எந்தக் காட்சியில் இசை தேவை, எங்கு அமைதியே போதுமானது என்பதை உணர்ந்து இசையைப் பயன்படுத்தியிருக்கிறார். ஒளிப்பதிவு இப்படத்தின் பலன்களில் ஒன்று, 25 நிமிடங்கள் நீளும் ஒரே ஷாட்டை எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் படமாக்கியிருப்பது மிகப்பெரிய சாதனை. கதைக்குத் தேவையான இருண்ட சூழலையும் பதற்றத்தையும் ஒளிப்பதிவின் மூலமாக அழகாக உருவாக்கியுள்ளார்.

சந்தோஷ் தவாக்கர் எழுதி இயக்கியுள்ள இப்படம், வழக்கமான உளவியல் திரில்லர் படங்களிலிருந்து மாறுபட்ட கதை சொல்லும் பாணியைக் கொண்டுள்ளது. என்னதான் நேர்த்தியாக திரைக்கதை இருந்தாலும், இரண்டு மணி நேரம் முழுவதும் இதே மெதுவான பாணியில் கதை நகர்வது சிலருக்குச் சோர்வை ஏற்படுத்தலாம்.

பலம்:

  • சுமார் 25 நிமிடங்கள் நீளும் ஒரே தொடர்ச்சியான காட்சி.
  • நடிகர்களின் சிறப்பான நடிப்பு மற்றும் ஒருங்கிணைப்பு.
  • இஷிதா தேஷ்முக்கின் இயல்பான நடிப்பு.
  • இருளை அழகாக்கும் அற்புதமான ஒளிப்பதிவு.
  • இளையராஜாவின் பின்னணி இசை.
  • கதாநாயகிக்கும் கோழியின் கதாபாத்திரத்திற்கும் இடையே உருவாக்கப்பட்டுள்ள குறியீட்டு ஒப்புமை (Metaphor).
  • சிறிய காட்சிகளிலும் கவனமாகச் செய்யப்பட்டுள்ள விவரங்கள்.

பலவீனம்:

  • மிகவும் மெதுவாக நகரும் திரைக்கதை.
  • ஒரே இரவில் நடைபெறும் சம்பவங்களை இரண்டு மணி நேரத்திற்கு விரிவுபடுத்தியிருப்பது.
  • கிளைமாக்ஸ் சிலருக்கு முன்கூட்டியே கணிக்கக்கூடியதாக இருக்கலாம்.

குடும்பத்துடன் பார்க்கலாமா? – படத்தில் பாலியல் காட்சிகள் பிரதானமாக இடம்பெறவில்லை. இருப்பினும், சில இடங்களில் ரத்தம் தெறிக்கும் கொடூரமான காட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனவே UA 16+ வயது வரம்பிற்கு ஏற்ற படமாகக் கருதலாம்.

இறுதியாக, ‘கோந்தல்’ பொறுமையை சோதிக்கும் உலக சினிமா

Film Crazy Rating – 3 /5

Leave a Comment