பிரதம திரிஷ்டிய குட்டக்கார் – திரைப்பட விமர்சனம் (Pradhama Drishtiya Kuttakkar Movie Tamil Review)
படக்குழு:
நடிகர்கள்: பார்வதி திருவோத்து, மேத்யூ தாமஸ், உன்னிமாயா பிரசாத், சித்தார்த் பரதன், விஜயராகவன், வினய் ஃபோர்ட், ஆசிப் நெடுமங்காடு
இசை: முஜீப் மஜீத்
ஒளிப்பதிவு: ராபி வர்கீஸ்
எடிட்டிங்: செம்மன் சாக்கோ
தயாரிப்பு: 11 Icons Film Productions
இயக்கம்: ஷாகத் நிலம்பூர்.
கதைச் சுருக்கம்:
கதாநாயகியின் கணவர் காவல்துறையில் பணியாற்றியபோது, பணியிலேயே உயிரிழந்துவிடுகிறார். இதனால் கருணை அடிப்படையில் கதாநாயகிக்கும் காவல்துறையில் வேலை கிடைக்கிறது. பணியில் சேர்ந்த பிறகு அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட்டு வழக்கமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். இந்நிலையில், ஒரு நாள் இரவு ரோந்துப் பணிக்காக அவர் கிளம்புகிறார். ஆனால், அந்த இரவு தனது வாழ்க்கையையே புரட்டிப்போடப் போகிறது என்பது அவருக்குத் தெரியாது. அந்த இரவில் அடுத்தடுத்து அரங்கேறும் அதிர்ச்சிகரமான சம்பவங்களும், அவற்றைச் சுற்றி நடைபெறும் விசாரணையும்தான் படத்தின் கதை.
FC விமர்சனம்:
சாலிடான எழுத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒரு அட்டகாசமான இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் படமாக இதைச் சொல்லலாம். குறிப்பாக, கிரைம் திரில்லர் மற்றும் விசாரணைத் திரில்லர் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஒரு நல்ல விருந்தாக அமையும். படம் ஆரம்பித்ததும் கதைக்களத்தையும் முக்கியக் கதாபாத்திரங்களையும் தெளிவாக அறிமுகப்படுத்துகிறார்கள். அதன்பிறகு ஒரு முக்கியமான சம்பவம் தொடங்கியதும், படம் வேகமெடுக்க ஆரம்பிக்கிறது. அங்கிருந்து கிளைமாக்ஸ் வரை பல திருப்பங்களுடன் பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இரண்டாம் பாதியில் நாம் எதிர்பார்க்காத பல திருப்பங்களும் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
பார்வதி திருவோத்து, மேத்யூ தாமஸ், உன்னிமாயா பிரசாத், சித்தார்த் பரதன், விஜயராகவன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் வினய் ஃபோர்ட் மற்றும் ஆசிப் நெடுமங்காடு ஆகியோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களைச் சரியாகக் கையாண்டிருக்கிறார்கள்.
தொழில்நுட்ப ரீதியாகப் பார்த்தால், இந்தப் படம் மிகவும் வலுவாக இருக்கிறது. ஒளிப்பதிவாளர் ராபி வர்கீஸின் கேமரா உழைப்பு பல காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. குறிப்பாக, 360 டிகிரியில் கேமராவைச் சுழற்றிப் படமாக்கியிருக்கும் சில காட்சிகள் திரையில் மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றன. எடிட்டர் செம்மன் சாக்கோவின் பங்களிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலம். குறிப்பாக, சில காட்சிகளுக்கு இடையிலான டிரான்சிஷன்களும் மேட்ச் கட்களும் அட்டகாசமாக அமைந்துள்ளன. உதாரணமாக, இரண்டு கதாபாத்திரங்கள் ஒரு வீட்டிற்குள் திருடுவதற்காக நுழையும்போது அங்கிருக்கும் சிசிடிவி கேமராவைக் கவனித்து அதில் டேப் ஒட்டுகிறார்கள். அந்த டேப்பை அடுத்ததாகப் பிரிக்கும் காட்சியில் நேரடியாக விசாரணை அதிகாரி நிற்பது போன்ற டிரான்சிஷன் மிகவும் சிறப்பாக இருக்கிறது.
அதேபோல், எந்தெந்த வீடுகளில் விளக்குகள் அணைக்கப்பட்டிருக்கின்றன என்பதைப் பார்த்து திருடர்கள் தங்கள் செயல்களைத் திட்டமிடும் காட்சியிலும் பயன்படுத்தப்பட்டிருக்கும் மேட்ச் கட் சிறப்பாக அமைந்திருக்கிறது. இதுபோன்று பல இடங்களில் எடிட்டிங் மூலம் சாதாரணக் காட்சிகளைக்கூட சுவாரசியமான அனுபவமாக மாற்றியிருக்கிறார்கள். முஜீப் மஜீத்தின் பின்னணி இசையும் படத்தின் விறுவிறுப்புக்குப் பெரிய பக்கபலமாக இருக்கிறது. பல முக்கியமான காட்சிகளின் பதற்றத்தையும் தாக்கத்தையும் அதிகரிப்பதில் அவரது இசை முக்கியப் பங்கு வகிக்கிறது.
இவ்வளவு சிறப்பம்சங்கள் இருந்தாலும், சில விஷயங்களை இன்னும் கொஞ்சம் சிறப்பாகச் செய்திருக்கலாம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது. குறிப்பாக, பார்வையாளர்களையும் விசாரணை அதிகாரிகளையும் ஒருசில இடங்களில் தவறாக வழிநடத்தும் வகையில் சில விஷயங்கள் திரைக்கதையில் வைக்கப்பட்டுள்ளன. அதில் வரும் ஒரு தந்தம் தொடர்பான சம்பவத்தின் முடிவு என்னவானது என்பதை இன்னும் தெளிவாகவும் நம்பும்படியாகவும் முடித்திருக்கலாம்.
மேலும், ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் உயிரிழக்கும் கதாபாத்திரத்தைப் பற்றி ஏற்கெனவே சில விஷயங்கள் நமக்குத் தெரிந்திருப்பதால், அந்த மரணம் நிகழும்போது அந்த நபர் தப்பித்திருக்கக் கூடாதா என்ற எண்ணத்தைவிட, அவர் இறந்தது சரிதான் என்ற எண்ணமே ஏற்படுகிறது. அதே சம்பவத்தில் தொடர்புடைய மற்ற நான்கு கதாபாத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கைப் பிரச்சினைகள் மேலோட்டமாக மட்டுமே காட்டப்பட்டுள்ளன. அவர்களுடைய வாழ்க்கையில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன, அவர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்ற உணர்வை ஆழமாக உருவாக்கத் தவறியிருக்கிறார்கள்.
வினய் ஃபோர்ட்டின் கதாபாத்திரம் ஆரம்பத்தில் பின்னால் ஏதோ முக்கியமான விஷயம் செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பை உருவாக்குகிறது. ஆனால், இறுதியில் அந்தக் கதாபாத்திரத்தைச் சாதாரணமாக முடித்துவிட்டார்கள். அந்தக் கதாபாத்திரத்தை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்தியிருக்கலாம். இருப்பினும், இந்தச் சிறிய குறைகளைத் தாண்டி, படம் முழுவதும் விறுவிறுப்பான விசாரணையையும் எதிர்பாராத திருப்பங்களையும் ரசிக்க முடிகிறது. குறிப்பாக, இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர் ரசிகர்களுக்கு இது நிச்சயமாக ஒரு நல்ல தியேட்டர் அனுபவமாக இருக்கும்.
பலம்:
- வலுவான கதை மற்றும் திரைக்கதை.
- பார்வதி திருவோத்து உள்ளிட்ட நடிகர்களின் சிறப்பான நடிப்பு.
- விறுவிறுப்பான விசாரணைக் காட்சிகள்.
- இரண்டாம் பாதியில் இடம்பெறும் எதிர்பாராத திருப்பங்கள்.
- ராபி வர்கீஸின் சிறப்பான ஒளிப்பதிவு.
- செம்மன் சாக்கோவின் அட்டகாசமான எடிட்டிங் மற்றும் மேட்ச் கட்கள்.
- முஜீப் மஜீத்தின் பின்னணி இசை.
- கிளைமாக்ஸ் வரை தொடரும் பரபரப்பு.
பலவீனம்:
- தந்தம் தொடர்பான சம்பவத்தின் முடிவு இன்னும் தெளிவாக இருந்திருக்கலாம்.
- சில கதாபாத்திரங்களின் தனிப்பட்ட வாழ்க்கை ஆழமாகச் சொல்லப்படவில்லை.
- வினய் ஃபோர்ட்டின் கதாபாத்திரம் எதிர்பார்த்த அளவுக்குப் பயன்படுத்தப்படவில்லை.
- சில காட்சிகளில் உணர்வுப்பூர்வமான தாக்கம் குறைவாக இருக்கிறது.
குடும்பத்துடன் பார்க்கலாமா?
படத்தில் ரத்தம் தெறிக்கும் வகையிலான சில வன்முறைக் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாலியல் காட்சிகள் எதுவும் இல்லை. UA 16+ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இறுதியாக, ‘பிரதம திரிஷ்டிய குட்டக்கார்‘ – வலுவான திரைக்கதையும் அதிரடி திருப்பங்களும் நிறைந்த தரமான இன்வெஸ்டிகேட்டிவ் திரில்லர்!
Film Crazy Rating – 3.5 / 5