ரணபலி – திரைப்பட விமர்சனம் (Ranabaali Movie Tamil Review)
படக்குழு:
நடிகர்கள்: விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா, அர்னால்ட் வோஸ்லூ, ஈஸ்வரி ராவ், லால்
இசை: அஜய் – அதுல்
ஒளிப்பதிவு: நிரவ் ஷா, ஜிஷ்ணு பட்டாச்சார்யா
எடிட்டிங்: கார்த்திகா ஸ்ரீனிவாஸ்
தயாரிப்பு: மைத்ரி மூவி மேக்கர்ஸ்
இயக்கம்: ராகுல் சங்க்ரித்யன்.
கதைச் சுருக்கம்:
19ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியின் கொடுமைகளால் பாதிக்கப்படும் ஒரு கிராமத்து மக்களை அடிமைப்படுத்தி, அவர்களின் வாழ்விடத்திலிருந்து வெளியேற்ற ஆங்கிலேயர்கள் திட்டமிடுகின்றனர். இதனை எதிர்த்து, தனது மக்களுக்கான உரிமையையும் நியாயத்தையும் பெற்றுத் தர வேண்டும் என்ற நோக்கத்துடன் களமிறங்குகிறார் நாயகன். மக்கள் பசியின்றி, சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதற்காகப் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக அவர் நடத்தும் போராட்டங்களும், அதனால் ஏற்படும் விளைவுகளும்தான் படத்தின் மையக்கதை.
FC விமர்சனம்:
முதலில் நடிகர்களை பொறுத்தவரை நாயகன் விஜய் தேவரகொண்டா, உடலமைப்பிலும் தோற்றத்திலும் கதாபாத்திரத்திற்காகத் தயாராகியிருப்பது தெரிகிறது. சில உணர்ச்சிகரமான காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக ராஷ்மிகாவுடன் இடம்பெறும் முக்கியமான எமோஷனல் காட்சி மனதில் நிற்கிறது. ஆனால் பல இடங்களில் தேவைக்கு அதிகமான முகபாவனைகளும், மிகைப்படுத்தப்பட்ட உடல்மொழியும் சற்று செயற்கையாகத் தெரிகின்றன. நாயகி ராஷ்மிகா மந்தனா, தனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டுள்ளார். விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து நடித்துள்ள உணர்ச்சிகரமான காட்சியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறார். முக்கிய பாத்திரத்தில் வரும் ஈஸ்வரி ராவ் தனது அனுபவமான நடிப்பால் கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். அர்னால்ட் வோஸ்லூ, வில்லனாக அறிமுகமாகும்போது வலுவான எதிர்பார்ப்பை உருவாக்குகிறார். ஆனால் கதையின் பிற்பகுதியில் அவரது கதாபாத்திரம் போதுமான வலிமையுடன் பயன்படுத்தப்படவில்லை என்பது ஏமாற்றம்.
அஜய் – அதுல் இவர்களின் இசை படத்திற்கு முக்கியமான பலமாக அமைந்துள்ளது. குறிப்பாக பின்னணி இசை சில காட்சிகளை அடுத்த கட்டத்திற்கு உயர்த்துகிறது. ‘எந்தையா சாமி’ பாடல் அழகான மெலடியாக அமைந்துள்ளது. ஒளிப்பதிவில் 19ஆம் நூற்றாண்டின் காலகட்டத்தையும் அதன் சூழலையும் காட்சிப்படுத்திய விதம் பாராட்டத்தக்கது. மேலும், கலை இயக்கம் மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு, அந்தக் காலகட்டத்தின் பின்னணியை உருவாக்குவதில் தேவையான உழைப்பு தெரிகிறது. CGI மற்றும் VFX பெரிய திரையில் பார்க்கும்போது சில காட்சிகளில் CGI, VFX தரம் சற்று பலவீனமாகத் தெரிகிறது. சில காட்சிகள் இன்னும் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கலாம்.
சுதந்திரப் போராட்டம், ஆங்கிலேயர்களின் அடக்குமுறை, மக்களின் தியாகம் எனப் பலமுறை சினிமாவில் பார்த்துப் பழகிய கதைக்களத்தையே இப்படமும் எடுத்துக்கொண்டுள்ளது. அதனால், கதையில் புதுமையான அனுபவம் கிடைப்பது குறைவாகவே உள்ளது. குறிப்பாக, படத்தின் பெரும்பாலான காட்சிகள் முன்கூட்டியே கணிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளன. சுமார் 20 நிமிடங்களுக்கு முன்பே முடித்திருக்கக்கூடிய கதையை மூன்று மணி நேரத்திற்கு நீட்டித்திருப்பது சோர்வை ஏற்படுத்துகிறது. இரண்டாம் பாதியில் வரும் சிறிய ஆச்சரியமான திருப்பம் ஓரளவுக்கு வேலை செய்தாலும், படத்தின் ஒட்டுமொத்த திரைக்கதையைத் தாங்கும் அளவுக்கு அது வலுவாக இல்லை.
பலம்:
- விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா இணைந்து நடித்துள்ள உணர்ச்சிகரமான காட்சி.
- 1877ஆம் ஆண்டு நடைபெற்றதாகக் குறிப்பிடப்படும் ‘தி கிரேட் மைக்ரேஷன்’ சம்பவத்தைப் பின்னணியாகக் கொண்ட காட்சிகள்.
- அக்காலகட்டத்தின் உண்மையான புகைப்படங்களைப் பயன்படுத்தியிருக்கும் விதம்.
- அஜய் – அதுலின் பின்னணி இசை.
- சில காட்சிகளில் வெளிப்படும் பிரிட்டிஷ் ஆட்சியின் கொடூரமான அடக்குமுறை.
பலவீனம்:
- ஏற்கெனவே பலமுறை பார்த்துப் பழகிய கதைக்களம்.
- மூன்று மணி நேரத்திற்கு நீளும் திரைக்கதை.
- பல காட்சிகள் முன்கூட்டியே கணிக்கக்கூடிய வகையில் அமைந்திருப்பது.
- விஜய் தேவரகொண்டாவின் சில இடங்களில் மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு.
- வில்லன் கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்தில் கொடுக்கப்படும் முக்கியத்துவம் பின்னர் குறைந்துவிடுவது.
- சில ஆக்ஷன் காட்சிகளில் நம்பகத்தன்மை குறைவாக இருப்பது.
- CGI மற்றும் VFX காட்சிகளில் தரம் குறைவாகத் தெரிவது.
- கதையை இன்னும் விரைவாகவும் வலுவாகவும் முடித்திருக்கலாம்.
குடும்பத்துடன் பார்க்கலாமா? – படத்தில் அதிக அளவிலான வன்முறை, வெட்டுக் காட்சிகள் மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. சில காட்சிகள் பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியளிக்கக்கூடும். எனவே குடும்பத்துடன் பார்க்கும் முன்பு இதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இறுதியாக, ‘ரணபலி‘ ரத்தமும் பழிவாங்கலும் கலந்த ஆவெரேஜ் அதிரடி வேட்டை
Film Crazy Rating – 2.75 /5