‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்பட விமர்சனம்
படக்குழு:
நடிகர்கள்: விக்ரம், கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லக்ஷ்மி, சோபிதா, சரத்குமார், பார்த்திபன், ரகுமான் மற்றும் பலர்.
இசை: ஏ.ஆர்.ரஹ்மான்
ஒளிப்பதிவு: ரவிவர்மன்
எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத்
தயாரிப்பு: லைகா ப்ரொடக்ஷன்ஸ்
இயக்கம்: மணிரத்னம்.


கதைச்சுருக்கம்:
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, அருண்மொழிவர்மன் இறந்து விட்டதாக செய்திகள் பரவ பரப்பரப்பாகிறது சோழ தேசம். ஆதித்த கரிகாலன் தஞ்சையை நோக்கி கடுங்கோபத்துடன் வந்திறங்குகிறார். ஆனால், அருண்மொழி வர்மன், வந்தியத்தேவனும் ஊமைராணியால் காப்பற்றப்படுகின்றனர். மறுபுறம் ஆதித்த கரிகாலனைக் கொல்லக் காத்திருக்கும் நந்தினி, கரிகாலனை கடம்பூரில் வைத்து கொலை செய்ய திட்டமிடுகிறார். இறுதியாக திட்டமிட்டவாறே ஆதித்த கரிகாலனை நந்தினி கொலை செய்தாரா? இதனால் தஞ்சையில் ஏற்பட்ட பிரச்சனைகள் என்ன? அருண்மொழிவர்மன் அரசனாக முடிசூட்டப்பட்டாரா? என்கிற கேள்விகளுக்கு பதிலே இரண்டாம் பாகம். (பொன்னியின் செல்வன் புத்தகம் படித்தவர்களுக்கு கதை தெரியும், இது படிக்காதவர்களுக்கு சிறு கதைச்சுருக்கம்).


FC விமர்சனம்:
பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் ஏகோபித்த வரவேற்பை தொடர்ந்து இன்று இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. திரைக்கதையில், விறுவிறுப்பில் முதல் பாகத்தை மிஞ்சியதா? வாருங்கள் விமர்சனத்திற்குள் சென்று பார்ப்போம். நடிகர்களை பொறுத்தவரை அனைவருமே ஏற்றுக்கொண்ட பாத்திரங்களை மிக அழகாகவும்,நேர்த்தியாகவும் செய்து கொடுத்துள்ளனர். குறிப்பாக விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி மூன்று பேரும் கூடுதல் கைதட்டல் பெறுகின்றனர். காட்சியமைப்பில் நந்தினி, ஆதித்த கரிகாலன் சந்திக்கும் காட்சிகளாகட்டும், வந்தியத்தேவன், குந்தவை இடையே வரும் சிறிய காதல் காட்சி என இரத்தங்கள், சத்தங்களுக்கு மத்தியிலும் மயிலிறகாக வருடியுள்ளார் மணிரத்னம்.
டெக்னிக்கல் டீமை பொறுத்தவரை, இசைப்புயல் ஏ.ஆர்,ரஹ்மானின் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டடித்திருந்தாலும், வீடியோவாக பார்க்கும்போது மேலும் ரசிக்க வைக்கிறது. அதேபோல் பின்னணி இசையில் சில இடங்களில் இன்னும் மெருகேற்றியிருக்கலாம் எனினும், நிறைவாகவே கொடுத்துள்ளார். ரவிவர்மனின் ஒளிப்பதிவில் காட்சிகள் ஒவ்வொன்றும் பளிங்கு போன்று மின்னுகிறது. ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் படத்தின் விறுவிறுப்பை தாங்கி பிடித்துள்ளார் என்றே சொல்ல வேண்டும் அந்தளவு கிரிஸ்பாக காட்சிகளை வெட்டி, இணைத்துள்ளார். கலை தோட்டாதரணியின் செட் வொர்க் அனைத்துமே குறையில்லை.


படத்தின் குறையாக தெரிவது, வரலாற்று திரிபுகள், தவறான புரிதல் என பொன்னியின் செல்வன் புத்தகத்தின் மேலேயே பல விமர்சனங்கள் உண்டு. அதற்குள் செல்லாமல் படமாக பார்த்தால் முதல் பாகத்தை விட இந்த பாகம் சுவாரஸ்யமாகவே செல்கிறது. என்ன கொஞ்சம் மெதுவாக செல்கிறது. ஆனால், எந்தவித அதீத மசாலா காட்சிகளை உள்புகுத்தாமல் எடுத்துக்கொண்ட கதையை அழகாக கொண்டு சென்று முடித்துள்ளார் மணிரத்னம். திரைமொழிக்காக சில மாறுதல்களை செய்துள்ளார் அது படம் பாருங்கள் புரியும். மொத்தமாக படம் எப்படி என்றால், தமிழ் சினிமாவின் கனவுப்படமாக கருதப்பட்ட இந்த போன்னியின் செல்வன், நிச்சயம் அனைவரும் காண வேண்டிய காவியத்தில் ஒன்று. (அதேநேரம், இது முழுக்க முழுக்க கல்கி எழுதிய புனைவு கதை என்பதை மனதில் வைத்து கொள்ளுங்கள்).
பொன்னியின் செல்வன் 2 – வெற்றி வாகை சூடுவான்
Ponniyin Selvan 2 Film Crazy Rating: 3.5 /5
உடனுக்குடன் செய்திகளை பெற கூகுள் நியூஸ் பக்கத்தை ஃபாலோ பண்ணுங்க…