சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் (Environment Impact Assessment- EIA 2020) வரைவு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கார்த்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பின் மூலம் இயற்கை விவசாயத்தை கையிலெடுத்திருக்கும் கார்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடென்ப நாடா வளத்தன நாடல்ல நட வளந்தரு நாடு-குறள் 739. ‘முயற்சி செய்து தேடாமலேயே தரும் வளத்தை உடையநாடுகளை சிறந்த நாடுகள் என்று கூறுவர். தேடி முயன்றால் வளம் தரும் நாடுகள் சிறந்த நாடுகள் அல்ல’- மேற்கண்ட குறளுக்கு ஏற்ப பல வளங்கள் உடைய சிறந்த நாடாக, உலக நாடுகள் போற்றும் நம் இந்தியாவில் இப்போது உள்ள சுற்றுச்சூழல் சட்டங்களே, நம் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க போதுமானதாக இல்லை.


ஆனால், தற்போது மத்திய அரசு வெளியிட்டிருக்கும், சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவு (Environmental impact Assessment- EIA 2020)) நம் இந்திய நாட்டின் சுற்றுச்சூழலுக்கு மேலும் அச்சுறுத்தலாக அமைந்திருப்பதாகவே தோன்றுகிறது. மலைகளும் ஆறுகளும் பல்வகை உயிரினங்களுமே நம் வாழ்விற்கு ஆதாரமானவை. மரங்களையும் விவசாய நிலங்களையும் அழித்து நெடுஞ்சாலைகள் போடுவதும் இயற்கை வளங்களை அழித்து தொழிற்சாலைகள் அமைப்பதும் நிச்சயம் வளர்ச்சி அல்ல. இயற்கை வளங்களை அழித்து, அதை வளர்ச்சியின் அடையாளமாகக் காட்டுவது வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் முயற்சி. அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது.


இந்த வரைவு அறிக்கையில் ‘பல முக்கிய திட்டங்களை மக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம்’ என்கிற ஒரு சரத்தே, நம் உள்ளத்தில் மிகப்பெரிய அவநம்பிக்கையையும் அச்சத்தையும் உருவாக்குகிறது. நம் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியும் மக்களாகிய நாம் பேசவே முடியாது என்பது எந்த வகையில் நியாயமான ஒரு சட்டமாக இருக்கும்? மேலும் தொழிற்சாலைகளின் வகைப்படு மாற்றம், பழைய விதிமீறல்களுக்கு பிந்தைய உண்மை, மக்கள் கருத்து, பதிவுக்கான நாட்களை குறைப்பது போன்ற சரத்துகளும் அச்சுறுத்துகின்றன. குமரி முதல் காஷ்மீர் வரையிலுமான சட்டம் என்றபோது, இந்த வரைவறிக்கை வெறும் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டுமே வெளியிடப்பட்டு இருக்கிறது. தமது தாய்மொழி மட்டுமே அறிந்த கோடிக்கணக்கான மக்கள் இந்த கொள்கைகளைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டாமா? நாட்டிற்கான முன்னேற்றங்கள் தேவை என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.


ஆனால் கோவிட்-19 எனும் அரக்கப் பிடியில் நாம் அனைவரும் சிக்கி, மீளப் போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நம் வாழ்வாதாரத்தையும் முக்கியமாக நமது வரும் சந்ததியினரின் வாழ்வையும் நிர்ணயிக்கக் கூடிய சக்தியுள்ள இந்தச் சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்? எனவே, இந்த வரைவு அறிக்கையின் சாதக பாதக அம்சங்களை அனைத்து தரப்பு மக்களிடம் கொண்டு சேர்த்து, பொது விவாதமாக்கி, அதை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல நமக்கு கிடைத்திருக்கும் கடைசி வாய்ப்பை நாம் நிச்சயமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். eia2020-moefcc@gov.in என்ற மின்னஞ்சல் முகவரியில் ஆகஸ்ட் 11, 2020 தேதிக்குள் நம் கருத்துக்களை பதிவு செய்வோம். அறிஞர்கள், ஆய்வாளர்கள் கருத்துகளுக்கும் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து தேவையான மாற்றங்களை புதிய வரைவில் கொண்டு வரவேண்டுமென மக்களில் ஒருவனாக கேட்டுக்கொள்கிறேன்” என தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.


இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யாவும் இதுக்குறித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார், அவர் கூறியுள்ளதாவது, “பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்..”. இவர்களது கருத்துக்கள் தற்போது EIA குறித்து பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Twitter Feed:
பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்.. #EIA2020 https://t.co/le0hgpzHPX
— Suriya Sivakumar (@Suriya_offl) July 29, 2020
கொட்டும் மழையில் அட்டகாச போட்டோஷூட் நடத்திய தர்ஷா குப்தா!
டாக்டர் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நடிகை ஷிவானி!
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்…
செய்திகள் பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிரவும். மேலும் இதுபோன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் பெற FILM CRAZY தளத்தை Subscribe செய்யவும்...